திங்கள், 11 நவம்பர், 2013

இவர்கள் திருந்தவே மாட்டார்கள்

இவர்கள் திருந்தவே மாட்டார்கள் 

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கேமரா கண்காணிப்பில் சார் பதிவாளர் அலுவலகங்கள் என்கிற பதிவினை வெளியிட்டு அதனால் ஒரு பயனும் இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதோ ஒரு செய்தி.


சர்ர்-பதிவாளரின் பொறுப்பற்ற பதிலை பாருங்கள். கட்டணம் யார் செலுத்தினாலும் பதிவு செய்யலாமாம். அப்படியாக பதிவுத்துறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா ? கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும்  பதிவு செய்யலாம் என்கின்ற பட்சத்தில் பளிங்கு கற்களால் ஆன கட்டிடம் எதற்கு ? கணிணி எதற்கு ? தேவையற்ற பணியாளர்கள் எதற்கு ? பால் பூத் போல ஒரு தகர கொட்டகை அமைத்து வசூல் செய்து தபால் அலுவலகம் போல் முத்திரை குத்தி பத்திரம் வழங்கலாமே ? உயர் நீதி மனறம் இது போன்ற வழக்குகளில் பலமுறை கண்டித்தும் பதிவுத்துறையின் பொறுப்பற்ற தன்மையினை என்னவென்று சொல்வது ? எதெதற்கோ பொது நல வழக்கு போடும் நபர்கள், சமூக நல விரும்பிகள்அரசியல் வல்லுனர்கள், சட்ட மேதைகள் வாய் மூடிக்கொண்டிருப்பதன் பொருள் புரியவில்லை.


ஒரு துறைக்கு தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரியினை அரசாங்கம் நியமிப்பது இது போன்ற சட்ட குறைபாடுகளை சரி செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தி, சட்ட சீர் திருத்தம் கொண்டு வரச்செய்யத்தான். நீதி மன்றமும் ஒவ்வொரு முறையும் கண்டணம் தெரிவிப்பதோடு சரி. அதனை சரி செய்யும்படி உத்திரவிடுவதுமில்லை. அது சரி  செய்யப்படுகின்றதா  என்று கவனிப்பதுமில்லை.

வெள்ளி, 8 நவம்பர், 2013

செய்தியும் – நகைச்சுவை கருத்தும்

செய்தியும் – நகைச்சுவை கருத்தும்

நாளிதழ்களில் படிக்கும் செய்திகளை விட அவற்றின் மீது கூறப்படும் கருத்துக்கள் சில சமயங்களில் ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையாகவும் உள்ளன. உதாரணத்திற்கு, இன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தி ஒன்றும், அதற்கான பின்னூட்டமும் :

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணகர்த்தா?கருணாநிதி கேள்வி – தினமலர் செய்தி


விறு விறுன்னு இலைக்கு முன்பாகவே சூரியன் போஸ்டரை மெட்ரோ ரயிலில் ஒட்டிவிடுங்கள்...- வாசகர் கருத்து 

புதன், 6 நவம்பர், 2013

'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள்

'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள்

நமது மாநிலத்திற்கு வருவாய் ஈட்டி தரும் துறைகளில் டாஸ்மாக்கிற்கு அடுத்த படியாக பதிவுத்துறை உள்ளது. இப்பேர்பட்ட பதிவுத்துறையில் நிலமோசடி, ஆள்மாறாட்டம், லஞ்சம் போன்ற முறைகேடுகளைத் தடுக்க தமிழகத்திலுள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்கள் இணையத்தின் உதவியோடு கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுமாம். சிரிப்பு தான் வருகின்றது. இந்த முட்டாள் தனமான நடவடிக்கை பார்த்து. முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் "இந்தா பாரு" என்று நேரடியாகவா ஈடுபடுகின்றார்கள் ? லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ்காரர், லஞ்ச பணத்தை எதிரில் அல்லது அக்கம் பக்கத்தில் இருக்கும் டீ கடையில் கொடுக்க சொல்லிவிட்டு பின்னர் டீ கடைக்காரரிடமிருந்து பெற்றுக்கொள்வது போல், பதிவுத்துறையில் புரோக்கர்கள் மூலமாக மறைமுகமாக முறைகேடுகள் நடைபெறுகின்றன. முறைகேடுகளின் மூலக்காரணத்தை தடுக்காமல், கண்காணிப்பு கேமேராவினை நிறுவுவது, வின்னர் திரைப்படத்தில் வடிவேலு ஒரு கோட்டை வரைந்து, இந்த கோட்டினை நீயும் தாண்டி வரக்கூடாது, நானும் தாண்டி வரமாட்டேன் என்று சொல்வது போலுள்ளது. கண்காணிப்பு கேமரா நிறுவுவதில் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. செய்யும் முறைகேடினை அலுவலகத்தில் செய்யாதே என்கின்ற   எச்சரிக்கை மணியைத்தவிர அது வேறு ஒன்றும் செய்திடப்போவதில்லை.

சரி, பின்னே எப்படித்தான் இதை கட்டுப்படுத்துவது ? அரசின் இந்த நடவடிக்கை தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்பார்களே அது போலத்தான் உள்ளது.

பதிவுத்துறை சட்டங்களை சீர் செய்வதை விட்டுவிட்டு, ஒப்புக்கு ஒரு தேவையற்ற வீண் செலவினை மேற்கொண்டு மக்கள் வரிப்பணம் விரயமாவதைத் தவிர்த்து இந்த நடவடிக்கை வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. பதிவுத்துறை சட்டத்தில் அப்படி என்ன ஓட்டை என்கிறீர்களா கேளுங்கள் சொல்கிறேன்.

உங்கள் பெயரில் பதிவாகியுள்ள உங்களது இல்லத்தை, அதில் நீங்கள்  வசித்து வருகையில், உங்களுக்கு முன்பின் தெரியாத, நீங்கள் பார்த்தேயிராத, உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபரிடமிருந்து உங்களுக்கு சொந்தமான, நீங்கள் வசித்து வருகின்ற இல்லத்தினை நான் விலைக்கு வாங்கியதாக ஒரு கிரயப்பத்திரம் பதிவு செய்ய முடியும் என்கிற தகவல் தெரியுமா உங்களுக்கு ?

அதெப்படி, என் பெயரில் பதிவாகி இருக்கும் இல்லம், நான் வசித்து வருகின்ற இல்லத்தினை   சார் பதிவாளர் எப்படி என்னுடைய கையொப்பமின்றி விற்கிரயம் பதிவு செய்ய இயலும் என்கிறீர்களா ? காசு, பணம், துட்டு, மணி, மணி ..... இருந்தால் என்னவேண்டுமானும் செய்யலாம்.
என் பெயரில் பதிவாகி இருக்கும் வீட்டினை சார் பதிவாளர் பதிவு செய்ய எப்படி அனுமதிக்கலாம் பதிவுத்துறை சட்டம் இருக்கிறதே என்று நீங்கள் சட்டம் பேசலாம். போய் பேசிப்பாருங்கள், சார்பதிவாளர் அருமையாக விளக்கம் தருவார். என்ன சொல்லுவார் தெரியமா ? சொத்து யாருடையது என்று பார்க்கும் அதிகாரமெல்லாம் எங்களுக்கு இல்லை. விற்பவருக்கு உரிமையானது தானா என்பதனை ஆய்வு செய்வதெல்லாம் எங்களின் பணி இல்லை. விற்பவர், வாங்குபவர் உண்மையான நபர்கள் தானா என்பதனை ஆய்வு செய்வது மட்டுமே எங்களின் பணி, அதாவது ராமசாமியிடமிருந்து கோவிந்த சாமி வாங்கினால் இன்னார் தான் ராமசாமியா, இன்னார் தான் கோவிந்த சாமியா என்று அடையாளம் காண்பது, மற்றும் சாட்சிக்கையெழுத்து போட்டவர்களை அடையாளம் காண்பது மட்டும் தான் அவர் பணியாம். பதிவுத்துறை சட்டம் அப்படி சொல்கிறதாம். சட்டத்தை எப்படி வளைக்கிறார்கள் பாருங்கள் மக்களே ! பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள். நீதி மன்றங்களால் மதிக்கப்படும் ஆவணங்கள். அத்தகைய சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பொறுப்பின்றி பதிந்து விட்டு எப்படி வியாக்கியானம் செய்கின்றார்கள் பாருங்கள்.


சொத்தின் உரிமையாளர் கண்டறியப்படவேண்டுமென்று பதிவுத்துறை சட்டத்தில் பச்சையாக சொல்லப்படவில்லையெனினும், விற்பவரின் அடையளம் காணப்படவேண்டுமென்பதன் உட்பொருள் என்ன ? விற்பவர் உண்மையான உரிமையாளர் என்று கண்டறியப்படவேண்டும் என்பதே அதன் உட்பொருள். இப்படி அயோக்கியத்தனம் பண்ணும் சார்-பதிவாளர்களை என்ன செய்யலாம் ? சரி, சட்டத்தில் சொல்லவில்லை, அதனால் அது எங்களின் பணி இல்லை என்று சொல்லும் சார்-பதிவாளர்கள், விற்பவர், வாங்குபவர்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் ? குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு,(பாஸ்போர்ட்), வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை வைத்து அடையாளம் காண்கிறார்களாம். இவைகள் செல்லத்தக்க அடையாளங்கள் என்று பதிவுத்துறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா ?   இல்லையே ! அதற்கு மட்டும் சொல்லப்படாத சட்டத்தை பின்பற்றுகின்றீர்கள் ! இப்போது சொல்லுங்கள் பதிவுத்துறை சட்ட சீர்திருத்தம் முக்கியமா அல்லது கண்காணிப்பு கேமரா முக்கியமா ?  

செவ்வாய், 22 அக்டோபர், 2013

தேர்தல் ஆணையமும், அதன் அச்சுறுத்தலும்

தேர்தல் ஆணையமும்அதன் அச்சுறுத்தலும்

ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வீர சண்முகமணி கூறியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. நியாயமான எச்சரிக்கை தான்.

வாக்காளர் ஒருவர் தன் இருப்பிடத்தை நகரின் வேறு ஒரு பகுதிக்கோ அல்லது வேறு ஒரு நகரத்திற்கோ மாற்றிக்கொண்டு செல்கையில், புதியதாக குடி பெயர்ந்த இடத்தில் வாக்காளராக பதிவு செய்கையில் இத்தகைய தவறு நேர வாய்ப்புள்ளது. அதற்காக குற்றவியல் நடவடிக்கை என்பது சற்று மிகையாகவே படுகின்றது.

பெரும்பாலும் தேர்தல்கள், மாநிலம்  முழுவதும் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்த முடியாதபட்சத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில்  இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் அதிகபட்சமாக இரண்டு கட்டத்தை தாண்டுவதற்கு வாய்ப்பில்லை. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் பட்சத்தில், வாக்காளரின் பெயர் இரு வேறு தொகுதிகளில் பெயர் இருப்பினும், நிச்சயமாக இரு இடங்களிலும் வாக்களிப்பது என்பது சாத்தியமில்லை. அட, ஒரு தடவை வாக்களிக்கவே நம்மவர்களில் சிலர் சுணங்கிக்கொண்டு ஓட்டளிக்க வாக்குச்சாவடி பக்கமே செல்வதில்லை. இதில் இரண்டு தடவை எங்கிருந்து ஓட்டளிக்கப் போகின்றார்கள் ? பின் எதற்கு இந்த எச்சரிக்கை ? உங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கள்ள ஓட்டினை தடுக்கத்தான். அதற்கு வாக்காளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயம் தானா ? தேர்தல் ஆணையத்தால் தடுக்க இயலாதா ? தற்போதைய கணிணி உலகில், ஒரு வாக்காளரின் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பதிவுகளை கண்டறிய இயலாதா ? இரண்டாவதாக வாக்காளராக பதிவு செய்வதற்கு முன்பே, கணிணியின் துணையுடன் கண்டறியலாமே ! இதெல்லாம் அதிக பணிச்சுமை என்று கூறலாம். ஆனால் குற்றவியல் நடவடிக்கை பணிச்சுமையற்றதா ?

1986 -ம் வருடம் பெங்களூர் நகரில் வசித்து வருகையில் கடவுச்சீட்டிற்காக (பாஸ்போர்ட்) விண்ணப்பித்திருந்தேன், 1991 -ம் வருடம் அது பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகிவிட திரும்பவும் 1995 -ம் வருடம் புதியதாக அதே பெங்களூர் நகர அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். புதியதாக விண்ணப்பிக்கையில் முன்பே பெறப்பட்ட கடவுச்சீட்டின் தகவல்களை தெரிவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும், பழைய கடவுச்சீட்டு கவனக்குறைவாக  எங்கோ வைத்துவிட்டு அது கிடைக்காமையினால் அந்த பகுதியினை நிரப்பாமல், புதியதாக தானே விண்ணப்பிக்கின்றோம், நிரப்பாவிட்டால் பரவாயில்லை என்று நினைத்து விண்ணப்பித்து விட்டேன். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து எனக்கு ஓலை ஒன்று வந்தது. அதில், பழைய கடவுச்சீட்டு குறித்த விவரங்களை தெரிவிக்காமல் நீங்கள் மறைத்துள்ளீர்கள், சட்டப்படி இது குற்றமாகும், இதற்கு நீங்கள் நேரில் விளக்க மளிக்கவிட்டால் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் வந்தது. பின்னர் நான் நேரில் சென்று விளக்கமளித்ததும், அதனை ஏற்றுக்கொண்டு  புதிய கடவுச்சீட்டினை வழங்கினார்கள்.  எதற்கு இதனை சொல்கிறேனென்றால், இன்றைய கணிணி உலகில், கணிணியின் உதவியுடன் இரண்டாவது வாக்களர் அடையாள அட்டை வழங்குவதற்கு முன்பே எளிதாக கண்டறிவதை விடுத்து, இரண்டு, மூன்று என்று அள்ளி வழங்கிவிட்டு, பின்னர் வாக்காளர்களை மிரட்டுவதன் காரணம் புரியவில்லை.

இரு இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களை மிரட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில்  போட்டியிடுவது முறைதானா ஒரே நபர் இரு வேறு தொகுதிகளின் பிரதிநிதியாக செயல்பட இயலாது என நமது அரசியலமைப்பு சட்டம் சொல்கையில், இரு வேறு தொகுதிகளில்  போட்டியிடும் நபர் இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வேட்பாளர் துறக்கும் தொகுதியின் மறு தேர்தலுக்கு செலவு செய்வது யார் ? வேட்பாளரா செலவு செய்கிறார் அரசாங்கம் தானே ! அது மக்களுடைய வரிப்பணம் தானே ? அதை நமது தேர்தல் ஆணையம் தடுக்க ஏன் முன்வரவில்லை ? தேர்தல் ஆணையம்  என்பது சுய அதிகாரம் பெற்ற அமைப்பு தானே ? இந்திய அரசுப்பணி அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை சொல்லி தேவையான மாற்றம் கொண்டு வருவதற்காகத்தானே  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கின்றது ? செய்யவேண்டியவன இன்னும் பல இருக்கையில் வாக்காளர்களை மிரட்டும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது ?

வாக்காளர்களுக்கு விடப்பட்டிருக்கும் இன்னொரு மிரட்டல் என்னவென்றால், ஓட்டிற்கு பணம் வாங்கினால் 3 ஆண்டு சிறைவாசம் என்பது. பணம் கொடுப்பவருக்கு என்ன தண்டனை என்று கூறவில்லை. பணம் பெறுபவருக்கு என்ன தண்டனை என்று தான் எச்சரிக்கை. இதிலும் அரசியல்வா(வி)யாதிக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் உள்ளது. 'சன்' தொலைக்காட்சியில்  செய்திகளுக்கிடையே யார், என்ன ,எங்கே எப்போது, எப்படி என்கின்ற வினாவினை கேட்பார்கள். அதே போன்று ஓட்டிற்கு பணம் அளிக்கும் முறையினை அறிமுகப்படுத்தியது யார், எங்கே, எப்போது, எப்படி  என்று கேட்டால் அனைவருக்கும் அதன் விடை தெரியும். அதனால் தானோ என்னவோ அந்த கேள்வி கேட்கப்படவில்லை.


சனி, 21 செப்டம்பர், 2013

விசித்திர வழக்குகள்

விசித்திர வழக்குகள்
நீதி மன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம்.
1) உண்மையாகவே நீதி கேட்டு தொடுக்கப்படும் வழக்குகள்
2) செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க அல்லது காழ்ப்புணர்ச்சியில்  பொய்யாக தொடுக்கப்படும் / ஜோடிக்கப்படும் வழக்குகள்
3) ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென்று விளம்பரத்திற்காக பொது நலன் என்கிற பெயரில் போடப்படும் வழக்குகள்
மூன்றாவது வகை வழக்கிற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தில் கண்ணன் கோவிந்த ராஜூலு என்பவரால் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை கூறலாம்.
வழக்கு விவரம்
அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சென்னை: "தமிழக அரசின் சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, கண்ணன் கோவிந்தராஜுலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மதத்தின் சின்னம்; இதை மாற்ற வேண்டும். மேலும், தேசியக் கொடியும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சரியான வடிவமைப்பில் பொறிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: குறிப்பிட்ட மதத்துக்கு சாதகமாக, தமிழக அரசு நடந்து கொண்டதாக, எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பிட்ட மத விழாக்களின் போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வழக்கம். கோவில் கோபுரம், தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றிருப்பதால், குறிப்பிட்ட மதத்துக்கு முன்னுரிமையோ, அதை ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது. சின்னத்தில், தேசியக் கொடி இடம் பெற்றிருப்பதைப் பொறுத்தவரை, சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. தேசியக் கொடியின் மாண்பை பாதுகாக்க, கொடி விதிகளின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் சின்னத்தில், தேசியக் கொடி, பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் முத்திரையில் கோபுர சின்னம் இன்று நேற்றல்ல, தனி மாநிலமாக தோன்றியதிலிருந்து, அப்போதைய முதல்வராக இருந்த ஓமந்தூர்  ரெட்டியாரால் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து அதனை ஒருவர் அதுவும் இந்து மதத்தை சேர்ந்தவர், மத சார்பின்மைக்கு எதிரானது என்று ஆட்சேபம் தெரிவித்து  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்கிறார் என்றால் அது விளம்பரமின்றி பிறகென்ன ?  வழக்கு தொடுத்தவர் வேறு மதத்தினை சார்ந்தவராக இருந்திருப்பின் அவர் மதத்தின் மீது கொண்ட பற்றினால் என்று ஓரளவிற்கு விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியாகவாவது இருந்திருக்கும். தமிழ் நாட்டின் பெருமைகளை பறைசாற்றுவதில் கோபுரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கட்டிடக்கலை, பளுதூக்கி , மின் தூக்கி, போன்ற நவீன கால விஞ்ஞான தொழில் நுட்பங்கள் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக மிக உயரமான கோபுரங்களை கட்டியுள்ளார்கள் என்றால் அதன் பொருள் என்ன ? அதனை நாம் அங்கீகரிக்க வேண்டாமா ? அவை நமக்கு பெருமை இல்லையா ? அதில் எங்கே மதம் வந்தது ? கோபுரத்தின் கீழே ஓம் நமசிவாயா என்றோ அல்லது ஓம் நமோ நாராயணா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் கூவுவதில் அர்த்தம் உள்ளது. அந்த கூறு கேட்டவனின் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கினை விசாரித்த நீதிமன்றத்தினை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏற்கனவே லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிய நிலையில் இருக்கையில் இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா ? ஆரம்ப கட்டத்திலேயே இதனை நிராகரித்திருக்க வேண்டாமா ? இந்த மாதிரி உருபடாத வழக்குகளை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கு இவருக்கு அபராதம் விதித்து கண்டித்திருக்கணும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பதிவர் திருவிழா

பதிவர் திருவிழா


நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு செல்வது போல, நானும் பதிவர்தான், நானும் பதிவார் தான் என்று கூறிக்கொண்டு பதிவர் திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதல் தேசிய கீதம் வரை இருந்துவிட்டு அதைப்பற்றி நாலுவரி (பக்கம்) கூட சொல்லாமல் போனால் எப்படி ? அதான் இந்த பதிவு.

ஞாயிறு காலை 7.30 மணிக்கெல்லாம் அடையாரிலுள்ள எனது வீட்டிலிருந்து கிளம்ப தயாராகிவிட்டேன். என் மனைவி, என்னங்க,  காலையில டிஃபன் கூட அங்கேயே தானா என்று கேட்டாளே பாருங்க ! நான் சொன்னேன், என்னடி, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது உனக்கு ரெஸ்ட் கொடுக்கலாமென்று மதியம் சாப்பாடு வேண்டாமென்று சொன்னால், காலை வேளையில் என் வயிற்றில் அடிக்கிறாயே, விட்டா ராத்திரி சாப்பாட்டிற்கும் டாடா காட்டிவிடுவாய் போலிருக்கே, இது உனக்கே நல்லா இருக்கா என்று கேட்டு விட்டு, சரி, சரி கிளம்பு, கிளம்பு என்று அவசரப்படுத்தினேன்.  போற வழியில தான போரூர் இருக்கு அங்க இருக்கிற என் மகள் வீட்டில் கொண்டு போய் விட சொல்லியிருந்ததால் அவளை கொண்டு போய் விட்டுவிட்டு, நான் கிளம்ப நினைத்தால், என் மகள் பிடித்துக்கொண்டாள். அட, 1 மணிக்கு தானே பிரியாணி போடப்போகின்றார்கள் அதற்கு இப்பவே ஏன் ஆலாய் பறக்கிறே,  இருந்து டீ சாப்பிட்டுவிட்டு போ என்றாள். மறுக்க முடியவில்லை. காரணம் அவள் நிறை மாத கர்ப்பிணி. நான் நிறை மாத கர்ப்பிணி என்று சொன்னது என் மனைவியை இல்லங்க. என் மகளை.  ஒரு வழியாக 8.30 மணிக்கு போரூரிலிருந்து, ஆற்காடு சாலை வழியாக இசை கலைஞர்கள் சங்கத்தை நோக்கி பயணித்தேன்.

 இசை கலைஞர்கள் சங்கம் அமைந்துள்ள  இடம் தெரியுமென்றாலும், மிகச்சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியாததால், வளசரவாக்கத்திலிருந்தே காரை மிக மெதுவாக ஓட்டியபடி வந்தேன். நல்ல வேளை காரில் அனைத்து கண்ணாடிகளையும் ஏற்றி மூடி வைத்திருந்தேன். இல்லாவிட்டல், ரோடில் போறவங்க வரவங்க கிட்ட எல்லாம், சாவு கிராக்கி, காலங்காத்தாலே மாப்பிள்ளை ஊர்வலம் மாதிரி போகிறான் பாரு என்கிற காதுபட திட்டுவதையெல்லாம் கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும். இசை  கலைஞர்கள் சங்கம் எதிர்புறத்தில் இருந்தமையால், கொண்டை ஊசி வளைவு அதாங்க  U turn  போட வழியில்லாததால், வடபழனி சென்று, தெற்கு சிவன் கோவில் தெரு, மேற்கு சிவன் கோவில் தெரு, கிழக்கு சிவன் கோவில் தெரு, வடக்கு சிவன் கோவில் தெரு என்று நாலாபுறமும் சுற்றி எப்படியோ அடித்து பிடித்து 9 மணிக்கு மிகச்சரியாக வந்தால் நிகழ்ச்சி  ஆரம்பிக்கவே இல்லை. எதுக்குடா லேட் என்று யாரையாவது கேட்கலாமென்றால், எனக்கு யாரையும் பழக்கமில்லை, யாருக்கும் என்னை தெரியவும் தெரியாது. யாருய்யா நீ, மூடிக்கிட்டு மூலையில போய் உட்காரு என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்துடன், சரி யாரோ அமைச்சர் வருகிறார் போலிருக்கிறது, அமைச்சர்கள் தானே விழாவிற்கு தாமதமாக வருவார்கள். யாராக இருக்கும் என்று மூளையை (இல்லாத ஒன்றை) கசக்கிக்கொண்டிருக்கையில், ஒரு ஃபிளாஷ் அடித்தது. நம்ம மங்குனி அமைச்சர் வருகிறார் போலிருக்கிறது, அதான் விழா ஆரம்பிக்க லேட்டாகிறது என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தேன், அப்பொழுது சக பதிவர், (ஆமாம், இவர் நூற்றுக்கணக்கில் பதிவுகள் போட்ட பதிவர் சிகரம், பதிவர் இமயம் என்று நீங்கள் உங்கள் மனதிற்குள் திட்டுவது எனக்கு கேட்கின்றது, இதை படித்துவிட்டு, மனசுக்குள்ள என்ன சத்தமாகவே திட்டுகிறேன் என்று நீங்கள் நினைபதும் எனக்கு கேட்கின்றது) திரு. செல்லப்பா அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். திரு. கவியாழியின் அறிமுகம் கிடைத்தது. சரி, இந்த விழாவிற்கு என்னை வரத்தூண்டியது எது ? கவிதையா, நமக்கும், அதற்கும் ரொம்ப தூரங்க. இலக்கியமா ? அட புண்ணாக்கே ! உங்களை  இல்லைங்க, என்னை நானே திட்டிக்கொள்கின்றேன், பின்னே, கவிதையே காத தூரம் என்று சொல்லிவிட்டு, இலக்கியமா என்று சொன்னால்... பின்னே பிரியாணியா ? அட போங்க நீங்க, பிரியாணி சாப்பிட அதைவிட காஸ்ட்லியான பெட்ரோல் செலவு செய்து  யாராவது வருவாங்களா ? பின்னே என்னதான் காரணம் சொல்லித்தொலையேண்டா என்று நீங்கள் முனகுவது எனக்கு கேட்கின்றது. சொல்கிறேன், சொல்கிறேன்.

 வலைத்தளத்தில் மலரும் வலைப்பூக்களில் பெரும்பாலான பூக்களை நுகர்ந்து அவற்றால் கவரப்பட்டு, அவற்றினை படைத்த பிரம்மாக்களை சந்திக்க வேண்டுமென்கின்ற ஆவல் தான். (அப்பாடா ! ஒரு வழியாக ஐஸ் வைத்தாகிவிட்டது). அதுமட்டுமல்ல பதிவர்களே ! மத்திய அரசு பணியின் நிமித்தமாக பல்வேறு மாநிலங்களில் அதாவது தமிழ் நாடு தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தமையால், தமிழ் மட்டுமல்லாமல், இதர மொழிகளைப்பற்றியும் ஓரளவிற்கு தெரிந்தவன் என்கிற முறையில், யாமறிந்த மொழிகளில், தமிழைப்போல இனிதான ஒன்றினைக் கண்டறியோம் என்பதற்கேற்ப, தமிழ் மீதான பற்றில் பங்கேற்க வந்தேன்.  என்னடா இவன் பதிவர் நிகழ்ச்சியைப்பற்றி சொல்வதாக கூறிவிட்டு எதையோ எழுதி இம்சை செய்கிறானே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இதோ, நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன். விழா சற்றேறக்குறைய 10 மணியளவில் துவங்கியது. திரு. சுரேகா தொகுத்து வழங்க, திரு. மதுமதி வரவேற்க, புலவர் அவர்களின் சுருக்கமான உரையுடன் விழா களை கட்டியது. திரு.மதுமதிக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். காரணங்கள் : 1) திரையுலக தொடர்பு இருப்பினும், எந்த விதமான பந்தாவும் இல்லாமல், மிக எளிமையாக திறம்பட பணியாற்றியது, 2) 90 Degree என்கின்ற ஒரு அருமையான, மனதை நெருடும் குறும்படத்தை வழங்கியமைக்கு.  படத்தில் ஒரே ஒரு குறை. சிறுமியாக நடித்த குழந்தைதான். குழந்தை மிக நன்றாக நடித்தார். அதில் ஒன்றும் குறைவில்லை. ஆனால் ஏழ்மை குடும்ப சிறுமி போல தோற்றமளிக்கவில்லை. அழகான செல்வந்த சிறுமி போல தோற்றமளிக்கின்றார். 3) பதிவர் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்து 6 நபர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் திரு.மதுமதியிடமிருந்து மட்டுமே வரவேற்பு பதில் மின்னஞ்சல் வரப்பெற்றது. ஆமாம், இவரு வரல்லேன்னா யார் கேட்கப்போறா, இவரு பெரிய கவர்னரு என்கின்ற முனகல் கேட்கிறது. 

நிகழ்ச்சியின் அடுத்த சுவாரசியமான பகுதி, பதிவர்களின் அறிமுகம். இதில் ஒரு சிறு நெருடல் இருந்தாலும், இரு தரப்பினரும் தவிர்த்திருக்கலாம். நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியபடியால், சுருங்க்கக்கூறி விடைபெறுவதே நலம். ஒவ்வொரு பதிவரும் 5 நிமிடங்கள்  எடுத்துக்கொண்டால் கூட ஏறக்குறைய 120 பதிவர்களுக்கு 600 நிமிடங்கள் அதாவது 10 மணித்துளிகள் தேவைப்படும். அறிமுகம் வெறும் அறிமுகமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ, பட்டிமன்றமாகவோ அல்லது கருத்து திரட்டலாகவோ இருத்தல் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம், வலைப்பதிவர் அறிமுகத்திற்குப்பிறகு, திரு. பாமரனின் பேச்சு. பாமரனின் எழுத்துக்கள் அனைத்தையும் படித்ததில்லை. காரணம் அவர் பிரபலமாக இருந்த சமயத்தில் நான் வேறு ஒரு தொலை தூர மாநிலத்தில பணியாற்றிக்கொண்டிருந்தேன்.  முதன்முறையாக திரு. பாமரனின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல பாமரனின் பேச்சு மிக சுவாரசியமாக பசிய்யும் மறக்கச்செய்தது. திரு பாமரனை பாராட்டும் தகுதி எனக்கு இருப்பதாக கருதவில்லை. அடுத்த்தாக, நம்மைவிட்டு, இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற வலைப்பதிவர்களின் நினைவாக மௌன அஞ்சலி. அதனைத்தொடர்ந்து மதிய உணவிற்கான இடைவேளை. இந்த இடைவேளையின்போது தான் எனக்கு பதிவர் திரு. ஜாக்கி சேகரின் அறிமுகம் கிடைத்தது. பட்டிக்காட்டானின் அறிமுகம் கிடைத்தது. பதிவர் சகோதரி ராஜியுடன் உரையாற்ற முடிந்தது. பதிவர் திருவிழாவிற்கு முன்பாக எலுமிச்சை சாதம் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பதிவர் திருவிழாவிற்கு வருவதாக ஒரு பதிவினை சகோதரி ராஜி வெளியிட்டிருந்தார். அவரிடம் எங்கே கட்டுச்சோறு என்று கேட்டவுடன் அவர் பயந்து போய், இத்தனை பேருக்கு நான் எப்படி கட்டி எடுத்து வரமுடியும் என்று வெள்ளந்தியாக பதிலளித்தார். நான் அவர் பதிவினை படித்து வருகின்றேன் என்பதனை குறிப்புணர்த்தவே அவ்வாறு கேட்டேன். அவர் நான் உண்மையிலேயே கேட்பதாக நினைத்து விட்டார் போலும். சகோதரி ராஜியின் மேடைப்பேச்சிலிருந்து ஒரு விவரம் மிகத்தெளிவாக தெரிகின்றது.  அவர், சக பதிவர்களாகிய நமக்கு மட்டும் டார்ச்சர் தரவதோடில்லாமல் அவருடைய பிள்ளைகளுக்கும், வலைப்பூவில் எழுதுவதற்கு மேட்டர் கேட்டு  டார்ச்சர் தருகிறார் என்பதே.  சரி, என்னுடைய டார்ச்சரை இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன். மீதியை பிறகு தொடர்கிறேன். நேரமின்மை காரணமாக உடனடியாக பதிவு போட முடியவில்லை. பதிவர் சந்திப்பில் என்னை ஆச்சரியப்படவைத்த விஷயங்க்களும் உள்ளன. அவற்றை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.


அநியாயங்கள் பாலாஜி