வணிகர் தினமும் கடையடைப்பும்
வெள்ளையன் என்பவர் வெள்ளையா, சிகப்பா அல்லது கருப்பா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் வணிகர் சங்கத்தலைவர் என்பது மட்டும் எனக்குத்தெரியும். அதெப்படி ! வெள்ளையா, சிகப்பா அல்லது கருப்பா என்று தெரியாது ஆனால் வணிகர் சங்கத்தலைவர் என்று சொல்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்களா ? அதான் சிங்காரச் சென்னையின் மூலை, முடுக்கு, இண்டு இடுக்கு, சந்து, பொந்து விடாமல், மே 5 –ம் தேதி வணிகர் தினம் வாரீர் வாரீர் என்று அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் எல்லா சுவர்களிலும் வண்ணம் தீட்டியிருந்தார்களே. அதென்ன வணிகர் தினம் என்று கேட்கின்றீர்களா ? பின்னே ! மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், ஏன் காதலர் தினம் என்று இருக்கும்போது வணிகர் தினம் என்று ஒன்று இருக்கக்கூடாதா ? அட இருந்துவிட்டு போகட்டுமே, யார் வேண்டாமென்றது. ஆனால் அதற்காக பந்த் செய்வது போல, முழு கடை அடைப்பு செய்தது நியாயமா என்பது தான் நம்முடைய கேள்வி. கடையை மூடாவிட்டால் வணிகர் மாநாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும் என்று கேள்வி கேட்கலாம். நியாயமான கேள்வி. தனி நபர் நடத்தும் கடை என்றால் கடையை மூடித்தானாக வேண்டும். அப்பொழுது கூட வேறு யார் பொறுப்பிலாவது கடையை திறந்து வைத்திருக்க அனுமதி அளித்திருக்கலாம். ஆனால் கடையடைப்பு செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமா ? இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமில்லை. வியாபாரிகள் கூட தங்களுடைய ஒரு நாள் வருமானத்தை இழக்கிறார்கள். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர் சங்கத்தலைவர், சிறு வணிகர்களின் ஒரு நாள் வருமானத்தில் மண்ணை அள்ளிப்போட்டு, அந்த நன்னாளில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை வியாபாரம் புரிய திணை புரிந்துள்ளார் நமது வணிகர் சங்கத்தலைவர். வணிகர் தினத்தன்று ரிலையன்ஸ், நீலகிரிஸ் போன்ற நிறுவனங்களில் திருவிழா போல ஏதோ விலையில்லா பொருள் வழங்குவது போல முண்டியடித்தது கூட்டம். பணம் உள்ளவன் என்ன விலை விற்றாலும் எந்த கடைக்கும் செல்வான். அவனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. நஷ்டப்படுவதும் கஷ்டப்படுவதும் பாழும் ஏழை மக்கள் தான். நட்சத்திர ஓட்டலுக்குள் யாரும் நுழையக்கூடாது, எல்லோரும் நாயர் டீ கடையில் தான் சாப்பிட வேண்டும் என்று கூற முடியுமா ? இல்லை நட்சத்திர ஓட்டல்களால் நாயர் டீ கடையும் கையேந்தி பவன்களும் வியாபாரம் செய்ய முடியாத நிலையா ? எதற்காக வணிகர் தினத்தன்று கடையடைப்பு ? வணிகர் தினம் என்று ஒரு நாளை நிர்ணயித்து அன்றைய தினம் கடையடைப்பு செய்வது போல, முடி திருத்துவோர் தினம், சுமை தூக்குவோர் தினம், மருத்துவர் தினம், ஓட்டுனர் தினம், நடத்துனர் தினம் என்று ஆளாளுக்கு ஒரு நாளை நிர்ணயித்து அன்றைய தினம் தங்களுடைய பணியிலிருந்து விலகி நின்றால் சரிதானா ? என்னய்யா இது பைத்தியக்காரத்தனம் ? அதையெல்லாம் விட மிகச்சிறந்த காமெடி என்னவென்றால் கரப்பான் பூச்சிகளை ஒழிப்பது தான் வணிகர்களின் வேலையா என்று வணிகர் சங்கத்தலைவர் முழங்கியுள்ளார். அது அரசாங்கத்தின் வேலை என்று முழங்கியுள்ளார். பேஷ் ! பேஷ் !! பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாகிவிட்டது. கரப்பான் பூச்சிகளை அரசாங்கமா வளர்த்து விடுகிறது கட்டுப்படுத்த ? வணிகர்கள் தங்களுடைய வர்த்தக இடத்தினை சுத்தமாக பூச்சிகள் அண்டவிடாமல் சுத்தமாக சுகாதாரமாக வைத்துக்கொள்வார்களா அல்லது தங்களுடைய இஷ்டத்திற்கு சுத்தமின்றி சுகாதாரமின்றி பராமரித்து விட்டு இது அரசாங்கத்தின் கடமை என்று கூவுவார்களா ? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்றாகிவிட்டது.