தேர்தல்
ஆணையமும், அதன் அச்சுறுத்தலும்
ஒரே வாக்காளரின் பெயர்
இரண்டு இடங்களில் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர்
பட்டியல் பார்வையாளர் வீர சண்முகமணி கூறியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி
வெளியாகியுள்ளது. நியாயமான எச்சரிக்கை தான்.
வாக்காளர் ஒருவர் தன்
இருப்பிடத்தை நகரின் வேறு ஒரு பகுதிக்கோ அல்லது வேறு ஒரு நகரத்திற்கோ
மாற்றிக்கொண்டு செல்கையில், புதியதாக குடி பெயர்ந்த இடத்தில் வாக்காளராக பதிவு
செய்கையில் இத்தகைய தவறு நேர வாய்ப்புள்ளது. அதற்காக குற்றவியல் நடவடிக்கை என்பது
சற்று மிகையாகவே படுகின்றது.
பெரும்பாலும் தேர்தல்கள்,
மாநிலம் முழுவதும் ஒரே நாளில்
நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்த முடியாதபட்சத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள்
இடைவெளியில் இரண்டு கட்டமாக நடத்தி
முடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் அதிகபட்சமாக இரண்டு கட்டத்தை
தாண்டுவதற்கு வாய்ப்பில்லை. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும்
பட்சத்தில், வாக்காளரின் பெயர் இரு வேறு தொகுதிகளில் பெயர் இருப்பினும், நிச்சயமாக
இரு இடங்களிலும் வாக்களிப்பது என்பது சாத்தியமில்லை. அட, ஒரு தடவை வாக்களிக்கவே
நம்மவர்களில் சிலர் சுணங்கிக்கொண்டு ஓட்டளிக்க வாக்குச்சாவடி பக்கமே செல்வதில்லை. இதில்
இரண்டு தடவை எங்கிருந்து ஓட்டளிக்கப் போகின்றார்கள் ? பின் எதற்கு இந்த எச்சரிக்கை
? உங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கள்ள ஓட்டினை தடுக்கத்தான். அதற்கு
வாக்காளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயம் தானா ? தேர்தல் ஆணையத்தால் தடுக்க
இயலாதா ? தற்போதைய கணிணி உலகில், ஒரு வாக்காளரின் இரண்டு அல்லது இரண்டிற்கு
மேற்பட்ட பதிவுகளை கண்டறிய இயலாதா ? இரண்டாவதாக வாக்காளராக பதிவு செய்வதற்கு
முன்பே, கணிணியின் துணையுடன் கண்டறியலாமே ! இதெல்லாம் அதிக பணிச்சுமை என்று
கூறலாம். ஆனால் குற்றவியல் நடவடிக்கை பணிச்சுமையற்றதா ?
1986
-ம் வருடம் பெங்களூர் நகரில் வசித்து வருகையில்
கடவுச்சீட்டிற்காக (பாஸ்போர்ட்) விண்ணப்பித்திருந்தேன், 1991 -ம் வருடம் அது பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகிவிட திரும்பவும் 1995 -ம்
வருடம் புதியதாக அதே பெங்களூர் நகர அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். புதியதாக
விண்ணப்பிக்கையில் முன்பே பெறப்பட்ட கடவுச்சீட்டின் தகவல்களை தெரிவிக்க வேண்டுமென
குறிப்பிடப்பட்டிருந்தும்,
பழைய கடவுச்சீட்டு கவனக்குறைவாக எங்கோ வைத்துவிட்டு அது கிடைக்காமையினால் அந்த
பகுதியினை நிரப்பாமல்,
புதியதாக தானே விண்ணப்பிக்கின்றோம், நிரப்பாவிட்டால்
பரவாயில்லை என்று நினைத்து விண்ணப்பித்து விட்டேன். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து
எனக்கு ஓலை ஒன்று வந்தது. அதில்,
பழைய கடவுச்சீட்டு குறித்த விவரங்களை தெரிவிக்காமல் நீங்கள்
மறைத்துள்ளீர்கள்,
சட்டப்படி இது குற்றமாகும், இதற்கு நீங்கள் நேரில்
விளக்க மளிக்கவிட்டால் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம்
வந்தது. பின்னர் நான் நேரில் சென்று விளக்கமளித்ததும், அதனை
ஏற்றுக்கொண்டு புதிய கடவுச்சீட்டினை
வழங்கினார்கள். எதற்கு இதனை
சொல்கிறேனென்றால்,
இன்றைய கணிணி உலகில்,
கணிணியின் உதவியுடன் இரண்டாவது வாக்களர் அடையாள அட்டை
வழங்குவதற்கு முன்பே எளிதாக கண்டறிவதை விடுத்து, இரண்டு, மூன்று
என்று அள்ளி வழங்கிவிட்டு,
பின்னர் வாக்காளர்களை மிரட்டுவதன் காரணம் புரியவில்லை.
இரு இடங்களில் பெயர் உள்ள
வாக்காளர்களை மிரட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், ஒரே வேட்பாளர் இரு வேறு
தொகுதிகளில் போட்டியிடுவது முறைதானா ? ஒரே நபர் இரு வேறு தொகுதிகளின் பிரதிநிதியாக செயல்பட இயலாது
என நமது அரசியலமைப்பு சட்டம் சொல்கையில்,
இரு வேறு தொகுதிகளில்
போட்டியிடும் நபர் இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வேட்பாளர்
துறக்கும் தொகுதியின் மறு தேர்தலுக்கு செலவு செய்வது யார் ? வேட்பாளரா
செலவு செய்கிறார் ? அரசாங்கம் தானே ! அது மக்களுடைய வரிப்பணம் தானே ? அதை
நமது தேர்தல் ஆணையம் தடுக்க ஏன் முன்வரவில்லை ? தேர்தல் ஆணையம் என்பது சுய அதிகாரம் பெற்ற அமைப்பு தானே ? இந்திய
அரசுப்பணி அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை சொல்லி தேவையான மாற்றம் கொண்டு
வருவதற்காகத்தானே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை
நியமிக்கின்றது ?
செய்யவேண்டியவன இன்னும் பல இருக்கையில் வாக்காளர்களை
மிரட்டும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது ?
வாக்காளர்களுக்கு விடப்பட்டிருக்கும்
இன்னொரு மிரட்டல் என்னவென்றால்,
ஓட்டிற்கு பணம் வாங்கினால் 3 ஆண்டு சிறைவாசம் என்பது.
பணம் கொடுப்பவருக்கு என்ன தண்டனை என்று கூறவில்லை. பணம் பெறுபவருக்கு என்ன தண்டனை
என்று தான் எச்சரிக்கை. இதிலும் அரசியல்வா(வி)யாதிக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம்
உள்ளது. 'சன்' தொலைக்காட்சியில் செய்திகளுக்கிடையே
யார், என்ன ,எங்கே எப்போது,
எப்படி என்கின்ற வினாவினை கேட்பார்கள். அதே போன்று
ஓட்டிற்கு பணம் அளிக்கும் முறையினை அறிமுகப்படுத்தியது யார், எங்கே, எப்போது, எப்படி என்று கேட்டால் அனைவருக்கும் அதன் விடை
தெரியும். அதனால் தானோ என்னவோ அந்த கேள்வி கேட்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியதை விட மக்களுக்கு விடுத்த மிரட்டல் அதிகம் தான்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி. அதிகாரம் படைத்த ஆணையம், அரசியல் கட்சிகளின் அதிகாரத்திற்கு அடி பணிவது அநியாயம் இல்லையா !
பதிலளிநீக்கு