அம்பானியின் வாரிசாக வேண்டுமா அல்லது டாட்டா பிர்லா வின் வாரிசாக வேண்டுமா
வாரிசு சான்றிதழ் என்பது இறந்து போன ஒரு நபரின் வாரிசுகளுக்கு " இன்னாரின் மகனாகிய இன்னார் இந்த நாளில் இறந்து போனார், அவருக்கு அடியிற்கண்டநபர்கள் வாரிசுதாரர்கள் ஆவார்கள்" என்று வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்றிதழாகும். இந்த சான்றிதழ் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதன் துணையின்றி, இறந்து போன நபரின் சொத்துக்களுக்கு, அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு, அலுவலகத்திலிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகைகளுக்கு, இன்னும் அவருக்குரிய எல்லாவிதமான வரவு மற்றும் செலவுகளுக்கு ஒருவர் உண்மையாக வாரிசாக இருப்பினும், உரிமை கொண்டாட முடியாது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவதற்கும் சில விதி முறைகள் உள்ளன. வாரிசுதாரர், இறந்தவரின் இறப்பு சான்றிதழுடன் ஒரு வருட காலத்திற்குள் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியரும் முறையான விசாரணைக்குப்பிறகே வாரிசு சான்றிதழ் வழங்க இயலும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பணத்தை விட்டெறிந்தால் அம்பானியின் வாரிசு என்று கூட வாரிசு சான்றிதழ் பெறலாம் என்பதனை பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வழி காட்டியுள்ளார். 1984 -ம் வருடம் நெய்வேலியில் கோபாலகிருஷ்ணன் என்கிற நபர் இறந்து போனதற்கு, மூன்று வாரிசு சான்றிதழ்கள் பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியரால் வெவ்வேறு கால கட்டங்களில் அதாவது 1984 , 1988 மற்றும் 2007 வருடங்களில் வெவ்வேறு படிவங்களில் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
வாரிசு சான்றிதழ் என்பது ஒருமுறை மட்டுமே வழங்கப்படலாம். அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ தேவைப்படும் பட்சத்தில், புதிய சான்றிதழ் வழங்குகையில் "திருத்தப்பட்ட வாரிசு சான்றிதழ்" என்றோ அல்லது முன்னர் வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படுகின்றது என்று குறிப்புடன் மட்டுமே வழங்க முடியும். ஆனால் இதனை கடை பிடிக்காமல் வாரிசு சான்றிதழா இந்தா பிடி என்று பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வழங்கியுள்ளார் என்றால் அவரது மக்கள் சேவையினை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அதுவும் 1984 -ம் வருடம் இறந்த ஒரு நபருக்கு, 23 வருடங்கள் கழித்து இறந்து போன நபரின் பாட்டனார் பெயர் வாரிசு சான்றிதழில் விடுபட்டு போனது என்று வாரிசுதாரருக்கு ஞானோதயம் ஏற்பட, உடனே அவர் பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியரை அணுக, அவரும் பாட்டனாரின் பெயரை உடனடியாக சேர்த்து புதியதாக ஒரு வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த வாரிசு சான்றிதழை வைத்துக்கொண்டு பாட்டனாரின் சொத்துக்கு நான் மட்டுமே உரிமையாளர் என்று கூறி சொத்தினை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். உண்மையான வாரிசுதாரர்கள் பலர் இருக்க, லஞ்சம் கொடுத்து பெறப்பட்ட சான்றிதழை வைத்துக்கொண்டு சொத்தினை பலருக்கு விற்பனை செய்துள்ளார். விவரம் அறிந்த உண்மையான வாரிசுதாரர்கள் பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியரை உலுக்க, அவரோ விண்ணப்பதாரின் மனுவின் மீது தகுந்த விசாரணை மேற்கொண்ட பிறகே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது என்று கூறி வருகின்றார். சரி, விசாரணை யாரிடம் மேற்கொள்ளப்பட்டது, யாரால் மேற்கொள்ளப்பட்டது ஆகிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டால் மழுப்பலான பதிலை தருகின்றார். விண்ணப்பதாரர் தான் அளித்த மனுவில் தான் நெய்வேலியில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயத்தில், பதிவுத்துறையிலும், நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிலும் தான் திருவண்ணாமலையில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். மோசடி நபரின் மோசடி செயல்களை உறுதிப்படுத்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பொது தகவல் அதிகாரியிடமிருந்து விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள முகவரியிட்ட இல்லம் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பதற்கான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவையும் பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு எடுத்துரைத்தும் மோசடி நபரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்து வருகின்றார் என்றால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதனையே உறுதிப்படுத்துகின்றது.
ஆகவே வாசகர்களே, நீங்கள் அம்பானியின் வாரிசாக வேண்டுமா அல்லது டாட்டா பிர்லாவின் வாரிசாக வேண்டுமா உடனே அணுகுங்கள் பண்ருட்டி வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியரை. அவர் உங்களுக்கு வாரிசு சான்றிதழ் அளிப்பார்.