சனி, 21 செப்டம்பர், 2013

விசித்திர வழக்குகள்

விசித்திர வழக்குகள்
நீதி மன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம்.
1) உண்மையாகவே நீதி கேட்டு தொடுக்கப்படும் வழக்குகள்
2) செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க அல்லது காழ்ப்புணர்ச்சியில்  பொய்யாக தொடுக்கப்படும் / ஜோடிக்கப்படும் வழக்குகள்
3) ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென்று விளம்பரத்திற்காக பொது நலன் என்கிற பெயரில் போடப்படும் வழக்குகள்
மூன்றாவது வகை வழக்கிற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தில் கண்ணன் கோவிந்த ராஜூலு என்பவரால் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை கூறலாம்.
வழக்கு விவரம்
அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சென்னை: "தமிழக அரசின் சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, கண்ணன் கோவிந்தராஜுலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மதத்தின் சின்னம்; இதை மாற்ற வேண்டும். மேலும், தேசியக் கொடியும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சரியான வடிவமைப்பில் பொறிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: குறிப்பிட்ட மதத்துக்கு சாதகமாக, தமிழக அரசு நடந்து கொண்டதாக, எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பிட்ட மத விழாக்களின் போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வழக்கம். கோவில் கோபுரம், தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றிருப்பதால், குறிப்பிட்ட மதத்துக்கு முன்னுரிமையோ, அதை ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது. சின்னத்தில், தேசியக் கொடி இடம் பெற்றிருப்பதைப் பொறுத்தவரை, சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. தேசியக் கொடியின் மாண்பை பாதுகாக்க, கொடி விதிகளின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் சின்னத்தில், தேசியக் கொடி, பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் முத்திரையில் கோபுர சின்னம் இன்று நேற்றல்ல, தனி மாநிலமாக தோன்றியதிலிருந்து, அப்போதைய முதல்வராக இருந்த ஓமந்தூர்  ரெட்டியாரால் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து அதனை ஒருவர் அதுவும் இந்து மதத்தை சேர்ந்தவர், மத சார்பின்மைக்கு எதிரானது என்று ஆட்சேபம் தெரிவித்து  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்கிறார் என்றால் அது விளம்பரமின்றி பிறகென்ன ?  வழக்கு தொடுத்தவர் வேறு மதத்தினை சார்ந்தவராக இருந்திருப்பின் அவர் மதத்தின் மீது கொண்ட பற்றினால் என்று ஓரளவிற்கு விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியாகவாவது இருந்திருக்கும். தமிழ் நாட்டின் பெருமைகளை பறைசாற்றுவதில் கோபுரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கட்டிடக்கலை, பளுதூக்கி , மின் தூக்கி, போன்ற நவீன கால விஞ்ஞான தொழில் நுட்பங்கள் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக மிக உயரமான கோபுரங்களை கட்டியுள்ளார்கள் என்றால் அதன் பொருள் என்ன ? அதனை நாம் அங்கீகரிக்க வேண்டாமா ? அவை நமக்கு பெருமை இல்லையா ? அதில் எங்கே மதம் வந்தது ? கோபுரத்தின் கீழே ஓம் நமசிவாயா என்றோ அல்லது ஓம் நமோ நாராயணா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் கூவுவதில் அர்த்தம் உள்ளது. அந்த கூறு கேட்டவனின் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கினை விசாரித்த நீதிமன்றத்தினை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏற்கனவே லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிய நிலையில் இருக்கையில் இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா ? ஆரம்ப கட்டத்திலேயே இதனை நிராகரித்திருக்க வேண்டாமா ? இந்த மாதிரி உருபடாத வழக்குகளை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கு இவருக்கு அபராதம் விதித்து கண்டித்திருக்கணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக