வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான உயர்நீதி மன்ற தீர்ப்பு


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான உயர்நீதி மன்ற தீர்ப்பு
Chennai High Court.jpg

அரசு நிர்வாகம் உள்ளிட்ட பிற துறைகளில் நம்பிக்கை இழக்கிற மக்கள் நீதித்துறையைத்தான் நாடுகிறார்கள். அந்த நீதித்துறையே தவறான அணுகுமுறையினை பின்பற்றினால் .....
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர், அந்த தகவல்கள் தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் குறைந்தபட்ச விவரங்களையாவது தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
2005 –ம் வருடம் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம், தகவல் கோருபவர், தகவல் கோருவதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெளிவு பட குறிப்பிட்டுள்ள நிலையில், இரு நபர்கள் கொண்ட சென்னை உயர் நீதி மன்ற பெஞ்ச்  பிறப்பித்துள்ள உத்திரவு விவாதத்திற்குரியதாகின்றது..
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, ஒரு சட்டம் இயற்றுகையில் அதனால் பலன் அடைவோர், பாதிப்பு அடைவோர் என இரு தரப்பினர் இருக்கவே செய்வர்.  தீண்டாமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் (Domestic Violence Act) போன்ற சட்டங்களை சில நபர்கள் தவறாக பயன்படுத்தி, பலரை அல்லலுறுத்தி வருகின்றனர் என செய்திகள் வருகின்றன. அச்சட்டங்களை மறு பரிசீலனை செய்யும்படியும் விவாதம் நடைபெற்று வருகின்றது. அதே போன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினையும் சிலர் தவறாக கையில் எடுத்து அரசு துறை ஊழியர்களை குடைச்சல் கொடுத்து வருவதும் நடைபெற்று வருகின்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் பெரும்பான்மையான கேள்விகளுக்கு பெரும்பான்மையான அரசு அலுவலர்கள் 1) உரிய காலத்தில் பதில் அளிப்பதில்லை; 30 நாட்களுக்குள் பதில் அளிக்க கெடு கொடுத்திருப்பதனால், 30 –ம் நாள் தேதியிட்டு, 40 நாட்களுக்குப்பிறகு பதில் அனுப்புகின்றனர். 2) கேட்கப்படும் தகவல்களுக்கு  சரியான தகவல்கள் அளிப்பதில்லை; பெரும்பாலும் ஒரு மழுப்பலான பதிலே அளிக்கப்படுகின்றது. சரி, செய்திக்கு வருவோம்.
புதுச்சேரியை சேர்ந்த பாரதி.என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரினார். இதற்கு, உயர் நீதிமன்ற பதிவாளர், தேவையான கோப்புகளை, உயர் நீதிமன்றம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என, பாரதிக்கு தகவல் தெரிவித்தார். மிகவும் சரியான பதில். இதில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. இதற்கிடையில், தனக்கு தேவையான தகவல்கள் தரப்படவில்லை என தகவல் கோரியவர், பதிவாளர் ஜெனரலிடம் முறையிட்டார். அது, தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான உரிய காரணங்கள் மனுதாரருக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்கிற தகவல் இல்லை. அதையடுத்து, மனுதாரர் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தார். அவர் கோரிய தகவல்களையும், உரிய ஆவணங்களையும், கோப்புகளில் உள்ள குறிப்புகளையும், மற்றும் 47 புகார்கள் தொடர்பான விவரங்களையும் அளிக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, மத்திய தகவல் ஆணையம், கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பதிவாளர் மனு தாக்கல் செய்தார். பாரதி கோரிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், இருக்கிற தகவல்கள், அனுமதிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோருபவர், அந்த தகவல்கள், தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச விவரங்களையாவது தெரிவிக்க வேண்டும்.அந்த விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை என்றால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கூறியுள்ள, அம்சத்தை பூர்த்தி செய்வதாக கருத முடியாது. தகவல் பெறும் உரிமை என்பது, தடையற்ற உரிமையாக கருத முடியாது. அது, நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
எனவே, தகவல் கோரப்படுவதன் நோக்கத்தையும், அந்த நோக்கத்துக்கு சட்டப் பின்னணி இருப்பதையும், தகவல் கோருபவர் வெளிப்படுத்த வேண்டும்.கோப்புகளை பார்த்துக் கொள்ள, பாரதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பதிவாளர் ஜெனரல் பதவிக்கு, தேர்வு விதிமுறைகள் இல்லை என, அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தகவல்கள் இல்லாதபட்சத்தில், அந்த தகவல்களை வழங்கும்படி பதிவாளரை வற்புறுத்த முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, வழக்கு தொடர்பான தகவலை பெறுவதற்கு, பாரதிக்கு உரிமையில்லை. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் வேண்டும் என்றால், விதிகளின்படி, சான்றளிக்கப்பட்ட நகலைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
ரத்து கோப்புகளில் உள்ள குறிப்புகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்களை பெறுவதற்கு உரிமையில்லை. எனவே, அவர் கோரிய தகவல்களை அளிக்கும்படி, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது தவறானது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

சபாஷ், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த கருத்து தவிர்த்து இதர கருத்துக்களுக்கு உண்மையிலேயே தலை வணங்குகின்றேன். ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த கருத்து ஒப்புக்கொள்ள முடியாதது.   மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இயற்றிய சட்டம் ஒழுங்காக, முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதனை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய நீதியரசர்கள், வரம்பு மீறி தகவல் கோருவதற்கான காரணத்தினை தெரிவிக்க வேண்டிய அவசியமைல்லை என்று இயற்றப்பட்ட சட்டத்தினை மீறி, தகவல்கள், தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது சரியல்ல, மறு பரிசீலனைக்குரியது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இவர்களுக்கு அதிகாரம் உள்ளதா ? தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று மாற்றம் கொண்டு வரச்சொல்லி மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கலாமே தவிர, இவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆணையிடலாகாது. ஒருவேளை நீதிமன்ற அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால் இத்தகைய உத்திரவோ என்கின்ற ஐயம் தோன்றுகின்றது