புதன், 6 நவம்பர், 2013

'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள்

'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள்

நமது மாநிலத்திற்கு வருவாய் ஈட்டி தரும் துறைகளில் டாஸ்மாக்கிற்கு அடுத்த படியாக பதிவுத்துறை உள்ளது. இப்பேர்பட்ட பதிவுத்துறையில் நிலமோசடி, ஆள்மாறாட்டம், லஞ்சம் போன்ற முறைகேடுகளைத் தடுக்க தமிழகத்திலுள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்கள் இணையத்தின் உதவியோடு கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுமாம். சிரிப்பு தான் வருகின்றது. இந்த முட்டாள் தனமான நடவடிக்கை பார்த்து. முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் "இந்தா பாரு" என்று நேரடியாகவா ஈடுபடுகின்றார்கள் ? லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ்காரர், லஞ்ச பணத்தை எதிரில் அல்லது அக்கம் பக்கத்தில் இருக்கும் டீ கடையில் கொடுக்க சொல்லிவிட்டு பின்னர் டீ கடைக்காரரிடமிருந்து பெற்றுக்கொள்வது போல், பதிவுத்துறையில் புரோக்கர்கள் மூலமாக மறைமுகமாக முறைகேடுகள் நடைபெறுகின்றன. முறைகேடுகளின் மூலக்காரணத்தை தடுக்காமல், கண்காணிப்பு கேமேராவினை நிறுவுவது, வின்னர் திரைப்படத்தில் வடிவேலு ஒரு கோட்டை வரைந்து, இந்த கோட்டினை நீயும் தாண்டி வரக்கூடாது, நானும் தாண்டி வரமாட்டேன் என்று சொல்வது போலுள்ளது. கண்காணிப்பு கேமரா நிறுவுவதில் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. செய்யும் முறைகேடினை அலுவலகத்தில் செய்யாதே என்கின்ற   எச்சரிக்கை மணியைத்தவிர அது வேறு ஒன்றும் செய்திடப்போவதில்லை.

சரி, பின்னே எப்படித்தான் இதை கட்டுப்படுத்துவது ? அரசின் இந்த நடவடிக்கை தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்பார்களே அது போலத்தான் உள்ளது.

பதிவுத்துறை சட்டங்களை சீர் செய்வதை விட்டுவிட்டு, ஒப்புக்கு ஒரு தேவையற்ற வீண் செலவினை மேற்கொண்டு மக்கள் வரிப்பணம் விரயமாவதைத் தவிர்த்து இந்த நடவடிக்கை வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. பதிவுத்துறை சட்டத்தில் அப்படி என்ன ஓட்டை என்கிறீர்களா கேளுங்கள் சொல்கிறேன்.

உங்கள் பெயரில் பதிவாகியுள்ள உங்களது இல்லத்தை, அதில் நீங்கள்  வசித்து வருகையில், உங்களுக்கு முன்பின் தெரியாத, நீங்கள் பார்த்தேயிராத, உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபரிடமிருந்து உங்களுக்கு சொந்தமான, நீங்கள் வசித்து வருகின்ற இல்லத்தினை நான் விலைக்கு வாங்கியதாக ஒரு கிரயப்பத்திரம் பதிவு செய்ய முடியும் என்கிற தகவல் தெரியுமா உங்களுக்கு ?

அதெப்படி, என் பெயரில் பதிவாகி இருக்கும் இல்லம், நான் வசித்து வருகின்ற இல்லத்தினை   சார் பதிவாளர் எப்படி என்னுடைய கையொப்பமின்றி விற்கிரயம் பதிவு செய்ய இயலும் என்கிறீர்களா ? காசு, பணம், துட்டு, மணி, மணி ..... இருந்தால் என்னவேண்டுமானும் செய்யலாம்.
என் பெயரில் பதிவாகி இருக்கும் வீட்டினை சார் பதிவாளர் பதிவு செய்ய எப்படி அனுமதிக்கலாம் பதிவுத்துறை சட்டம் இருக்கிறதே என்று நீங்கள் சட்டம் பேசலாம். போய் பேசிப்பாருங்கள், சார்பதிவாளர் அருமையாக விளக்கம் தருவார். என்ன சொல்லுவார் தெரியமா ? சொத்து யாருடையது என்று பார்க்கும் அதிகாரமெல்லாம் எங்களுக்கு இல்லை. விற்பவருக்கு உரிமையானது தானா என்பதனை ஆய்வு செய்வதெல்லாம் எங்களின் பணி இல்லை. விற்பவர், வாங்குபவர் உண்மையான நபர்கள் தானா என்பதனை ஆய்வு செய்வது மட்டுமே எங்களின் பணி, அதாவது ராமசாமியிடமிருந்து கோவிந்த சாமி வாங்கினால் இன்னார் தான் ராமசாமியா, இன்னார் தான் கோவிந்த சாமியா என்று அடையாளம் காண்பது, மற்றும் சாட்சிக்கையெழுத்து போட்டவர்களை அடையாளம் காண்பது மட்டும் தான் அவர் பணியாம். பதிவுத்துறை சட்டம் அப்படி சொல்கிறதாம். சட்டத்தை எப்படி வளைக்கிறார்கள் பாருங்கள் மக்களே ! பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள். நீதி மன்றங்களால் மதிக்கப்படும் ஆவணங்கள். அத்தகைய சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பொறுப்பின்றி பதிந்து விட்டு எப்படி வியாக்கியானம் செய்கின்றார்கள் பாருங்கள்.


சொத்தின் உரிமையாளர் கண்டறியப்படவேண்டுமென்று பதிவுத்துறை சட்டத்தில் பச்சையாக சொல்லப்படவில்லையெனினும், விற்பவரின் அடையளம் காணப்படவேண்டுமென்பதன் உட்பொருள் என்ன ? விற்பவர் உண்மையான உரிமையாளர் என்று கண்டறியப்படவேண்டும் என்பதே அதன் உட்பொருள். இப்படி அயோக்கியத்தனம் பண்ணும் சார்-பதிவாளர்களை என்ன செய்யலாம் ? சரி, சட்டத்தில் சொல்லவில்லை, அதனால் அது எங்களின் பணி இல்லை என்று சொல்லும் சார்-பதிவாளர்கள், விற்பவர், வாங்குபவர்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் ? குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு,(பாஸ்போர்ட்), வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை வைத்து அடையாளம் காண்கிறார்களாம். இவைகள் செல்லத்தக்க அடையாளங்கள் என்று பதிவுத்துறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா ?   இல்லையே ! அதற்கு மட்டும் சொல்லப்படாத சட்டத்தை பின்பற்றுகின்றீர்கள் ! இப்போது சொல்லுங்கள் பதிவுத்துறை சட்ட சீர்திருத்தம் முக்கியமா அல்லது கண்காணிப்பு கேமரா முக்கியமா ?  

6 கருத்துகள்:

  1. கடுமையான சட்டங்கள் மூலமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். நேர்மையாக தம் பணியை செய்ய வேண்டும் என்கிற சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கும். தண்டனை தரும் அச்சமே ஒழுக்கத்தை தரும்.

    பதிலளிநீக்கு
  2. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானது சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_5.html?showComment=1388893961977#c4831266787726832265

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி ரூபன் அவர்களே ! பதிவு குறித்து உங்க்களின் கருத்து வரவேற்கப்படுகின்றது.

      பாலாஜி

      நீக்கு
  4. பதில்கள்
    1. நீங்கள் கூறுவது 100% உண்மை. இந்த போலி பத்திரபதிவில் பாதிக்கப்பட்டவனாக இதை பதிவு செய்கிறேன். எனது மனையை போலி செட்டில்மன்ட் பத்திரம் பதிவு செய்து பட்டாவும் வாங்கியிருக்கிறார்கள். நான் இப்போது எனது ஓய்வு பெற்ற வயதில் சார்பதிவாளர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், நில அபபரிப்பு காவல் ஆணையர் அலுவலகம் என்று அலைகின்றேன். இன்னும் எனது பிரச்சினை தீரவில்லை. நீங்கள் எனக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? -- மோகன், 9884973334, 9444463877.

      நீக்கு