செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பதிவர் திருவிழா

பதிவர் திருவிழா


நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு செல்வது போல, நானும் பதிவர்தான், நானும் பதிவார் தான் என்று கூறிக்கொண்டு பதிவர் திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதல் தேசிய கீதம் வரை இருந்துவிட்டு அதைப்பற்றி நாலுவரி (பக்கம்) கூட சொல்லாமல் போனால் எப்படி ? அதான் இந்த பதிவு.

ஞாயிறு காலை 7.30 மணிக்கெல்லாம் அடையாரிலுள்ள எனது வீட்டிலிருந்து கிளம்ப தயாராகிவிட்டேன். என் மனைவி, என்னங்க,  காலையில டிஃபன் கூட அங்கேயே தானா என்று கேட்டாளே பாருங்க ! நான் சொன்னேன், என்னடி, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது உனக்கு ரெஸ்ட் கொடுக்கலாமென்று மதியம் சாப்பாடு வேண்டாமென்று சொன்னால், காலை வேளையில் என் வயிற்றில் அடிக்கிறாயே, விட்டா ராத்திரி சாப்பாட்டிற்கும் டாடா காட்டிவிடுவாய் போலிருக்கே, இது உனக்கே நல்லா இருக்கா என்று கேட்டு விட்டு, சரி, சரி கிளம்பு, கிளம்பு என்று அவசரப்படுத்தினேன்.  போற வழியில தான போரூர் இருக்கு அங்க இருக்கிற என் மகள் வீட்டில் கொண்டு போய் விட சொல்லியிருந்ததால் அவளை கொண்டு போய் விட்டுவிட்டு, நான் கிளம்ப நினைத்தால், என் மகள் பிடித்துக்கொண்டாள். அட, 1 மணிக்கு தானே பிரியாணி போடப்போகின்றார்கள் அதற்கு இப்பவே ஏன் ஆலாய் பறக்கிறே,  இருந்து டீ சாப்பிட்டுவிட்டு போ என்றாள். மறுக்க முடியவில்லை. காரணம் அவள் நிறை மாத கர்ப்பிணி. நான் நிறை மாத கர்ப்பிணி என்று சொன்னது என் மனைவியை இல்லங்க. என் மகளை.  ஒரு வழியாக 8.30 மணிக்கு போரூரிலிருந்து, ஆற்காடு சாலை வழியாக இசை கலைஞர்கள் சங்கத்தை நோக்கி பயணித்தேன்.

 இசை கலைஞர்கள் சங்கம் அமைந்துள்ள  இடம் தெரியுமென்றாலும், மிகச்சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியாததால், வளசரவாக்கத்திலிருந்தே காரை மிக மெதுவாக ஓட்டியபடி வந்தேன். நல்ல வேளை காரில் அனைத்து கண்ணாடிகளையும் ஏற்றி மூடி வைத்திருந்தேன். இல்லாவிட்டல், ரோடில் போறவங்க வரவங்க கிட்ட எல்லாம், சாவு கிராக்கி, காலங்காத்தாலே மாப்பிள்ளை ஊர்வலம் மாதிரி போகிறான் பாரு என்கிற காதுபட திட்டுவதையெல்லாம் கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும். இசை  கலைஞர்கள் சங்கம் எதிர்புறத்தில் இருந்தமையால், கொண்டை ஊசி வளைவு அதாங்க  U turn  போட வழியில்லாததால், வடபழனி சென்று, தெற்கு சிவன் கோவில் தெரு, மேற்கு சிவன் கோவில் தெரு, கிழக்கு சிவன் கோவில் தெரு, வடக்கு சிவன் கோவில் தெரு என்று நாலாபுறமும் சுற்றி எப்படியோ அடித்து பிடித்து 9 மணிக்கு மிகச்சரியாக வந்தால் நிகழ்ச்சி  ஆரம்பிக்கவே இல்லை. எதுக்குடா லேட் என்று யாரையாவது கேட்கலாமென்றால், எனக்கு யாரையும் பழக்கமில்லை, யாருக்கும் என்னை தெரியவும் தெரியாது. யாருய்யா நீ, மூடிக்கிட்டு மூலையில போய் உட்காரு என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்துடன், சரி யாரோ அமைச்சர் வருகிறார் போலிருக்கிறது, அமைச்சர்கள் தானே விழாவிற்கு தாமதமாக வருவார்கள். யாராக இருக்கும் என்று மூளையை (இல்லாத ஒன்றை) கசக்கிக்கொண்டிருக்கையில், ஒரு ஃபிளாஷ் அடித்தது. நம்ம மங்குனி அமைச்சர் வருகிறார் போலிருக்கிறது, அதான் விழா ஆரம்பிக்க லேட்டாகிறது என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தேன், அப்பொழுது சக பதிவர், (ஆமாம், இவர் நூற்றுக்கணக்கில் பதிவுகள் போட்ட பதிவர் சிகரம், பதிவர் இமயம் என்று நீங்கள் உங்கள் மனதிற்குள் திட்டுவது எனக்கு கேட்கின்றது, இதை படித்துவிட்டு, மனசுக்குள்ள என்ன சத்தமாகவே திட்டுகிறேன் என்று நீங்கள் நினைபதும் எனக்கு கேட்கின்றது) திரு. செல்லப்பா அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். திரு. கவியாழியின் அறிமுகம் கிடைத்தது. சரி, இந்த விழாவிற்கு என்னை வரத்தூண்டியது எது ? கவிதையா, நமக்கும், அதற்கும் ரொம்ப தூரங்க. இலக்கியமா ? அட புண்ணாக்கே ! உங்களை  இல்லைங்க, என்னை நானே திட்டிக்கொள்கின்றேன், பின்னே, கவிதையே காத தூரம் என்று சொல்லிவிட்டு, இலக்கியமா என்று சொன்னால்... பின்னே பிரியாணியா ? அட போங்க நீங்க, பிரியாணி சாப்பிட அதைவிட காஸ்ட்லியான பெட்ரோல் செலவு செய்து  யாராவது வருவாங்களா ? பின்னே என்னதான் காரணம் சொல்லித்தொலையேண்டா என்று நீங்கள் முனகுவது எனக்கு கேட்கின்றது. சொல்கிறேன், சொல்கிறேன்.

 வலைத்தளத்தில் மலரும் வலைப்பூக்களில் பெரும்பாலான பூக்களை நுகர்ந்து அவற்றால் கவரப்பட்டு, அவற்றினை படைத்த பிரம்மாக்களை சந்திக்க வேண்டுமென்கின்ற ஆவல் தான். (அப்பாடா ! ஒரு வழியாக ஐஸ் வைத்தாகிவிட்டது). அதுமட்டுமல்ல பதிவர்களே ! மத்திய அரசு பணியின் நிமித்தமாக பல்வேறு மாநிலங்களில் அதாவது தமிழ் நாடு தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தமையால், தமிழ் மட்டுமல்லாமல், இதர மொழிகளைப்பற்றியும் ஓரளவிற்கு தெரிந்தவன் என்கிற முறையில், யாமறிந்த மொழிகளில், தமிழைப்போல இனிதான ஒன்றினைக் கண்டறியோம் என்பதற்கேற்ப, தமிழ் மீதான பற்றில் பங்கேற்க வந்தேன்.  என்னடா இவன் பதிவர் நிகழ்ச்சியைப்பற்றி சொல்வதாக கூறிவிட்டு எதையோ எழுதி இம்சை செய்கிறானே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இதோ, நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன். விழா சற்றேறக்குறைய 10 மணியளவில் துவங்கியது. திரு. சுரேகா தொகுத்து வழங்க, திரு. மதுமதி வரவேற்க, புலவர் அவர்களின் சுருக்கமான உரையுடன் விழா களை கட்டியது. திரு.மதுமதிக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். காரணங்கள் : 1) திரையுலக தொடர்பு இருப்பினும், எந்த விதமான பந்தாவும் இல்லாமல், மிக எளிமையாக திறம்பட பணியாற்றியது, 2) 90 Degree என்கின்ற ஒரு அருமையான, மனதை நெருடும் குறும்படத்தை வழங்கியமைக்கு.  படத்தில் ஒரே ஒரு குறை. சிறுமியாக நடித்த குழந்தைதான். குழந்தை மிக நன்றாக நடித்தார். அதில் ஒன்றும் குறைவில்லை. ஆனால் ஏழ்மை குடும்ப சிறுமி போல தோற்றமளிக்கவில்லை. அழகான செல்வந்த சிறுமி போல தோற்றமளிக்கின்றார். 3) பதிவர் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்து 6 நபர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் திரு.மதுமதியிடமிருந்து மட்டுமே வரவேற்பு பதில் மின்னஞ்சல் வரப்பெற்றது. ஆமாம், இவரு வரல்லேன்னா யார் கேட்கப்போறா, இவரு பெரிய கவர்னரு என்கின்ற முனகல் கேட்கிறது. 

நிகழ்ச்சியின் அடுத்த சுவாரசியமான பகுதி, பதிவர்களின் அறிமுகம். இதில் ஒரு சிறு நெருடல் இருந்தாலும், இரு தரப்பினரும் தவிர்த்திருக்கலாம். நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியபடியால், சுருங்க்கக்கூறி விடைபெறுவதே நலம். ஒவ்வொரு பதிவரும் 5 நிமிடங்கள்  எடுத்துக்கொண்டால் கூட ஏறக்குறைய 120 பதிவர்களுக்கு 600 நிமிடங்கள் அதாவது 10 மணித்துளிகள் தேவைப்படும். அறிமுகம் வெறும் அறிமுகமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ, பட்டிமன்றமாகவோ அல்லது கருத்து திரட்டலாகவோ இருத்தல் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம், வலைப்பதிவர் அறிமுகத்திற்குப்பிறகு, திரு. பாமரனின் பேச்சு. பாமரனின் எழுத்துக்கள் அனைத்தையும் படித்ததில்லை. காரணம் அவர் பிரபலமாக இருந்த சமயத்தில் நான் வேறு ஒரு தொலை தூர மாநிலத்தில பணியாற்றிக்கொண்டிருந்தேன்.  முதன்முறையாக திரு. பாமரனின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல பாமரனின் பேச்சு மிக சுவாரசியமாக பசிய்யும் மறக்கச்செய்தது. திரு பாமரனை பாராட்டும் தகுதி எனக்கு இருப்பதாக கருதவில்லை. அடுத்த்தாக, நம்மைவிட்டு, இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற வலைப்பதிவர்களின் நினைவாக மௌன அஞ்சலி. அதனைத்தொடர்ந்து மதிய உணவிற்கான இடைவேளை. இந்த இடைவேளையின்போது தான் எனக்கு பதிவர் திரு. ஜாக்கி சேகரின் அறிமுகம் கிடைத்தது. பட்டிக்காட்டானின் அறிமுகம் கிடைத்தது. பதிவர் சகோதரி ராஜியுடன் உரையாற்ற முடிந்தது. பதிவர் திருவிழாவிற்கு முன்பாக எலுமிச்சை சாதம் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பதிவர் திருவிழாவிற்கு வருவதாக ஒரு பதிவினை சகோதரி ராஜி வெளியிட்டிருந்தார். அவரிடம் எங்கே கட்டுச்சோறு என்று கேட்டவுடன் அவர் பயந்து போய், இத்தனை பேருக்கு நான் எப்படி கட்டி எடுத்து வரமுடியும் என்று வெள்ளந்தியாக பதிலளித்தார். நான் அவர் பதிவினை படித்து வருகின்றேன் என்பதனை குறிப்புணர்த்தவே அவ்வாறு கேட்டேன். அவர் நான் உண்மையிலேயே கேட்பதாக நினைத்து விட்டார் போலும். சகோதரி ராஜியின் மேடைப்பேச்சிலிருந்து ஒரு விவரம் மிகத்தெளிவாக தெரிகின்றது.  அவர், சக பதிவர்களாகிய நமக்கு மட்டும் டார்ச்சர் தரவதோடில்லாமல் அவருடைய பிள்ளைகளுக்கும், வலைப்பூவில் எழுதுவதற்கு மேட்டர் கேட்டு  டார்ச்சர் தருகிறார் என்பதே.  சரி, என்னுடைய டார்ச்சரை இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன். மீதியை பிறகு தொடர்கிறேன். நேரமின்மை காரணமாக உடனடியாக பதிவு போட முடியவில்லை. பதிவர் சந்திப்பில் என்னை ஆச்சரியப்படவைத்த விஷயங்க்களும் உள்ளன. அவற்றை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.


அநியாயங்கள் பாலாஜி  

2 கருத்துகள்: