வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான உயர்நீதி மன்ற தீர்ப்பு


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான உயர்நீதி மன்ற தீர்ப்பு
Chennai High Court.jpg

அரசு நிர்வாகம் உள்ளிட்ட பிற துறைகளில் நம்பிக்கை இழக்கிற மக்கள் நீதித்துறையைத்தான் நாடுகிறார்கள். அந்த நீதித்துறையே தவறான அணுகுமுறையினை பின்பற்றினால் .....
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர், அந்த தகவல்கள் தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் குறைந்தபட்ச விவரங்களையாவது தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
2005 –ம் வருடம் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம், தகவல் கோருபவர், தகவல் கோருவதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெளிவு பட குறிப்பிட்டுள்ள நிலையில், இரு நபர்கள் கொண்ட சென்னை உயர் நீதி மன்ற பெஞ்ச்  பிறப்பித்துள்ள உத்திரவு விவாதத்திற்குரியதாகின்றது..
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, ஒரு சட்டம் இயற்றுகையில் அதனால் பலன் அடைவோர், பாதிப்பு அடைவோர் என இரு தரப்பினர் இருக்கவே செய்வர்.  தீண்டாமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் (Domestic Violence Act) போன்ற சட்டங்களை சில நபர்கள் தவறாக பயன்படுத்தி, பலரை அல்லலுறுத்தி வருகின்றனர் என செய்திகள் வருகின்றன. அச்சட்டங்களை மறு பரிசீலனை செய்யும்படியும் விவாதம் நடைபெற்று வருகின்றது. அதே போன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினையும் சிலர் தவறாக கையில் எடுத்து அரசு துறை ஊழியர்களை குடைச்சல் கொடுத்து வருவதும் நடைபெற்று வருகின்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் பெரும்பான்மையான கேள்விகளுக்கு பெரும்பான்மையான அரசு அலுவலர்கள் 1) உரிய காலத்தில் பதில் அளிப்பதில்லை; 30 நாட்களுக்குள் பதில் அளிக்க கெடு கொடுத்திருப்பதனால், 30 –ம் நாள் தேதியிட்டு, 40 நாட்களுக்குப்பிறகு பதில் அனுப்புகின்றனர். 2) கேட்கப்படும் தகவல்களுக்கு  சரியான தகவல்கள் அளிப்பதில்லை; பெரும்பாலும் ஒரு மழுப்பலான பதிலே அளிக்கப்படுகின்றது. சரி, செய்திக்கு வருவோம்.
புதுச்சேரியை சேர்ந்த பாரதி.என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரினார். இதற்கு, உயர் நீதிமன்ற பதிவாளர், தேவையான கோப்புகளை, உயர் நீதிமன்றம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என, பாரதிக்கு தகவல் தெரிவித்தார். மிகவும் சரியான பதில். இதில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. இதற்கிடையில், தனக்கு தேவையான தகவல்கள் தரப்படவில்லை என தகவல் கோரியவர், பதிவாளர் ஜெனரலிடம் முறையிட்டார். அது, தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான உரிய காரணங்கள் மனுதாரருக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்கிற தகவல் இல்லை. அதையடுத்து, மனுதாரர் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தார். அவர் கோரிய தகவல்களையும், உரிய ஆவணங்களையும், கோப்புகளில் உள்ள குறிப்புகளையும், மற்றும் 47 புகார்கள் தொடர்பான விவரங்களையும் அளிக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, மத்திய தகவல் ஆணையம், கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பதிவாளர் மனு தாக்கல் செய்தார். பாரதி கோரிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், இருக்கிற தகவல்கள், அனுமதிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோருபவர், அந்த தகவல்கள், தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச விவரங்களையாவது தெரிவிக்க வேண்டும்.அந்த விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை என்றால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கூறியுள்ள, அம்சத்தை பூர்த்தி செய்வதாக கருத முடியாது. தகவல் பெறும் உரிமை என்பது, தடையற்ற உரிமையாக கருத முடியாது. அது, நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
எனவே, தகவல் கோரப்படுவதன் நோக்கத்தையும், அந்த நோக்கத்துக்கு சட்டப் பின்னணி இருப்பதையும், தகவல் கோருபவர் வெளிப்படுத்த வேண்டும்.கோப்புகளை பார்த்துக் கொள்ள, பாரதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பதிவாளர் ஜெனரல் பதவிக்கு, தேர்வு விதிமுறைகள் இல்லை என, அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தகவல்கள் இல்லாதபட்சத்தில், அந்த தகவல்களை வழங்கும்படி பதிவாளரை வற்புறுத்த முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, வழக்கு தொடர்பான தகவலை பெறுவதற்கு, பாரதிக்கு உரிமையில்லை. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் வேண்டும் என்றால், விதிகளின்படி, சான்றளிக்கப்பட்ட நகலைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
ரத்து கோப்புகளில் உள்ள குறிப்புகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்களை பெறுவதற்கு உரிமையில்லை. எனவே, அவர் கோரிய தகவல்களை அளிக்கும்படி, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது தவறானது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

சபாஷ், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த கருத்து தவிர்த்து இதர கருத்துக்களுக்கு உண்மையிலேயே தலை வணங்குகின்றேன். ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த கருத்து ஒப்புக்கொள்ள முடியாதது.   மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இயற்றிய சட்டம் ஒழுங்காக, முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதனை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய நீதியரசர்கள், வரம்பு மீறி தகவல் கோருவதற்கான காரணத்தினை தெரிவிக்க வேண்டிய அவசியமைல்லை என்று இயற்றப்பட்ட சட்டத்தினை மீறி, தகவல்கள், தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது சரியல்ல, மறு பரிசீலனைக்குரியது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இவர்களுக்கு அதிகாரம் உள்ளதா ? தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று மாற்றம் கொண்டு வரச்சொல்லி மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கலாமே தவிர, இவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆணையிடலாகாது. ஒருவேளை நீதிமன்ற அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால் இத்தகைய உத்திரவோ என்கின்ற ஐயம் தோன்றுகின்றது

ஞாயிறு, 4 மே, 2014

காவல் துறையின் மெத்தன போக்கு - தீவிரவாதிகளுக்கு ஒரு அழைப்பு

காவல் துறையின் மெத்தன போக்கு - தீவிரவாதிகளுக்கு ஒரு அழைப்பு.

நமது நாட்டில் எதற்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, நீதிமன்றங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் நீதி கிடைப்பதில் தான் பஞ்சம். Majistrate Court, Munsif Court, Sessions Court, sub-court, District Court என்பதோடில்லாமல், Additional, Principal, என்கின்ற கூடுதல் மற்றும் முதன்மை நீதி மன்றங்களோடு, இளஞ்சிறார் குற்றங்களை விசாரிக்க இளங்குற்றவாளிக்கான நீதிமன்றம் (juvenile court ), குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நல நீதிமன்றம் (Family Court), நுகர்வோர்  வழக்குகளை தீர்த்து வைக்க நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court), சமரச உடன்படிக்கைகளை தீர்த்து வைக்க மக்கள் நீதிமன்றம் (Lok Adalat), போக்குவரத்து குற்றங்களை விசாரிக்க ஒரு தனி நீதிமன்றம் (Traffic Court), தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க தொழிலாளர் நீதிமன்றம் (Labour Court), அரசு ஊழியர்கள்  பிரச்சினையை தீர்க்க நிர்வாக தீர்ப்பாலயம் (Administrative Tribunal), இராணுவ வீரர்களின் குற்றங்களை விசாரிக்க இராணுவத்தாராலேயே நடத்தப்படும் ஒரு தனி நீதிமன்றம் (Military Court), மற்றும் இராணுவ வீரர்களின் பிரச்சினையை தீர்க்க இராணுவ தீர்ப்பாலயம்  (Armed Froces Tribunal) என்று பல தரப்பட்ட நீதிமன்றங்கள்.
வழக்குகளின் தன்மை மற்றும் தரத்திற்கேற்ப அவற்றினை விசாரிக்க பல்வேறு நீதிமன்றங்கள் இருந்த போதிலும், எந்த ஒரு நீதிமன்றத்திலாவது எந்த ஒரு வழக்கிலாவது, மிகக்குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா ?   
வீட்டு மனை வாங்க செலுத்திய பணத்திற்கு, மனை வழங்க  இயலாத நிலையில், பலமுறை படி ஏறி இறங்கி செலுத்திய பணத்தினை திருப்பி அளிக்குமாறு கேட்டதற்கு பாதி பணம் திருப்பி அளித்துவிட்டு, மீதி பாதியை திருப்பி அளிக்காமையினால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2008 –ம் வருடம் ஆணை பெறப்பட்டும், அதனை அந்த அமைப்பு (மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு நல சங்கம், தி.நகர், சென்னை) பெற்றுக்கொள்ளாமையினால், 2010 –ம் ஆண்டு ஒரு பிடியாணை செயலாக்க தி.நகர் காவல் நிலையத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் கடிதம் ஒன்றினை அனுப்பியது. 2010 –ம் வருடம் முதல் இன்றைய நாள் வரை தி.நகர்  காவல் நிலையத்தால் செயலாக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் வழக்கு விசாரணைக்கு வரும்பொழுதெல்லாம், நுகர்வோர் நீதிமன்றமும், மறுதேதி குறிப்பிட்டு வழக்கினை ஒத்தி வைக்க வேண்டியது ஒன்றே அதன் கடமை . என்று செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது. வழக்கு தொடுத்தவனுக்குத்தானே வலி தெரியும். நானும் விக்கிரமாதித்யன் போல என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தி.நகர்  காவல் நிலையம் சென்று பிடியாணையின் நிலவரம் என்ன என்று கண்டறிய சென்றேன். காவல் நிலைய எழுத்தரும் என்ன ஆணை, யாரால் எப்பொழுது வழங்கப்பட்டது என்று பொறுமையுடன் கேட்டுவிட்டு, அது போல ஒன்று பெறப்படவில்லை என்றும், அதன் நகல் ஒன்றினை கொண்டு வரும்படியும் “பொறுப்புடன்” பதில் அளித்தார்.. நானும் சலித்துக்கொள்ளாமல், நுகர்வோர் நீதிமன்றம். சென்று பிடியாணை நகல் ஒன்றினை கேட்டேன். அதற்கு நுகர்வோர் நீதிமன்றம், அவ்வாறு பிடியாணையினை மனுதாரருக்கு வழங்க இயலாது என்றும், வேண்டுமெனில், பிடியாணை கடிதம் வழங்கப்பட்ட கடிதம் எண் மற்றும் தேதியினை அளிப்பதாகவும் கூறி உதவினார்கள். அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் தி.நகர்  காவல் நிலையம் சென்றேன். மணிக்கணக்கில் காக்க வைத்து விட்டு, மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்கள். நானும் மூன்றாவது முறையாக மூறு நாட்கள் கழித்து தி.நகர்  காவல் நிலையம் சென்றேன். காவல் உதவியாளர் ஒருவர், ஒரு பெரிய காகித பண்டல் ஒன்றினை என் முன்னே பிரித்து ஒவ்வொன்றாக பிரித்து படித்து இதுவா, இதுவா என்று காட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு வழியாக கண்டுபிடித்து எடுத்து கொடுத்தால் அது 2013 –ம் வருடம் நுகர்வோர் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதம். 2010 –ம் வருடம் வழங்கப்பட்ட பிடியாணையினை நினைவு படுத்தி அனுப்பப்பட்ட கடிதம். 2010 –ம் வருடம் அனுப்பப்பட்ட பிடியாணை என்பதனை அறிந்த காவல் நிலைய எழுத்தர், அந்த ஆணையினை காணவில்லை, நீங்கள் நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நகல் பெர்று வாருங்கள் என்று கூறி என்னை அனுப்பி விட்டார். எனக்கென்னவோ, காவல் நிலைய ஊழியர், பிடியாணையினை சம்பந்தப்பட்ட நபரிடம் காட்டி, அதனை செயல்படுத்தாமலிருக்க, சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பிடியாணையினை குப்பைத்தொட்டிக்கு சமர்ப்பணம் செய்திருப்பார் என்றே எண்ணுகின்றேன்.
காவல் நிலையம் மூன்று முறை என்னை அலைக்கழித்ததை கூட நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால்,
ஒரு நீதிமன்ற பிடியாணைக்கே காவல் நிலையம் அளிக்கும் மதிப்பு இது என்றால், ஒரு சாதாரண மனிதனின் புகாரின் கதி என்னவாக இருக்கும் ?
கடைக்கு சென்று ஒரு செய்தித்தாள் வாங்கிக்கொண்டு வா என்பது போல நீதிமன்றத்திலிருந்து மீண்டும் ஒரு பிடியாணை பெற்று வா என்று கூறியது
ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக ஒரு நடவடிக்கையும் எடுக்காத மெத்தனம்

இவற்றையெல்லாம் பார்க்கையில், தீவிரவாதிகளே, இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை ஏன் கொல்கின்றீர்கள், வாருங்கள் இரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியனவற்றிற்கு பதிலாக காவல் நிலையம் வந்து வெடிகுண்டு வைக்க வாருங்கள் என்று அழைப்பு விட தோன்றுகின்றது. 

செவ்வாய், 4 மார்ச், 2014

பத்திர (பதிவு) ஊழல் துறை


பத்திர (பதிவு) ஊழல் துறை
போலி ஆவணங்களை ஒழிக்க வில்லங்க சான்றிதழ் வழங்குகையில் புதிய நடைமுறையினை பின்பற்ற வேண்டுமென்று பத்திரப்பதிவு துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை கூறியுள்ளதாக இன்றைய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடைபெறுகின்றன. அவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவில் அடங்காது. ஆனால் பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே அதை விட கொடுமை எதுவும் இருக்காது. இதர ஊழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி பாதிப்பு இருக்காது. ஆனால் போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய பாதிப்பு என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். பதிவுத்துறை, வருவாய் துறை, காவல்துறை, நீதிமன்றம் என்று பல்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படுவதோடு, பண விரயம், நேர விரயம், மன உளைச்சல்.... இதெல்லாம் யாருக்கு ? அப்பாவி உரிமையாளருக்கு. எவனோ ஒரு மோசடிப்பேர்வழி, போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சி செய்வான். சொத்திற்கு உரியவர் படாத பாடு பட்டு அதை மீட்பதற்கு பிரம்ம பிரயத்தன்ம் செய்ய வேண்டும். இறுதியில் சொத்து அவருடையது என்று தீர்ப்பு வருகையில் ஒன்று அவர் உயிருடன் இருக்க மாட்டார் அல்லது சொத்தில் பாதிக்கு மேல் வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற செலவு இதயாதி, இத்யாதி என்று அவர் இழந்திருப்பார். மோசடி புரிந்தவன், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மிகச்சுலபமாக தப்பித்துவிடுவான்.
எங்களுடைய பரம்பரை இல்லத்தினை, ஏழு தலைமுறைகளாக இன்றளவும் நாங்கள் வசித்து வரும் இல்லத்தினை ஒரு மோசடிக்கும்பல் எங்களுக்குத் தெரியாமலேயே, ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வில்லங்கங்கள் ஏற்படுத்தி, அதாவது ஓரிரு வருடத்திற்குள்ளேயே பல்வேறு விற்கிரய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இறுதியில், விற்கிரய பதிவு ஒன்றினை பதிவு செய்து, அப்பதிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்கள் நாங்கள் வசித்து வரும் வீட்டினை விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதில் வசித்து வரும் வாடகைதாரர்களாகிய நாங்கள் (இது எப்படி இருக்கு ?) காலி செய்ய மறுப்பதாகவும் கூறி, எங்களை காலி செய்யும்படி உத்திரவு வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் வரை சென்றார்கள். மிகத்தாமதாக, ஆனால் சரியான நேரத்தில் விவரம் அறிந்த நான், பதிவுத்துறை தலைவரை நேரில் சந்தித்து விவரம் தெரிவித்தேன். என் கதையை கேட்ட அவர், ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொன்னதும் வந்ததே எனக்கு கோபம். நேரடியாக அவரிடம் கேட்டே விட்டேன். ஐயா, ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொல்வதற்கா அரசு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியினை நியமிக்கின்றது ? இதுபோல் நடக்கிறதென்றால் அதை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு பதிவுத்துறையில் சட்ட சீர்திருத்தம் கொண்டு வர அரசுக்கு ஆலோசனை கூற வேண்டியது உங்கள் கடமையில்லையா என்று கேட்டவுடன், அவரும் பதிலுக்கு, சொத்து உன்னுடையது தானே, பின் நீ ஏன் காவல் துறையில் புகார் செய்யவில்லை என்று திருப்பி கேட்டார், அதற்கு நான், ஐயா, காவல் துறையில் நான் புகார் அளிக்காமல் இல்லை. ஆனால் காவல் துறை இது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை நீதி மன்றம் தான் விசாரிக்க முடியும் என்று சொல்லி, என் புகாரை ஏற்க மறுக்கின்றார்கள் என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய நிலையும் அதுதான், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கே இல்லை, நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க வேண்டியது தான் என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டார்.
பதிவுத்துறையால் மோசடிப்பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்பதனை அறிந்து, உயர் நீதி மன்றத்தில் காவல் துறையின் மெத்தனத்தை எடுத்துரைத்து வழக்கு பதிவு செய்ய் அறிவுறுத்தி ஆணை வழங்குமாறு கோரி ஒரு வழக்கு தொடுத்தேன். என் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதி மன்றம், அதனின் உண்மையினை அறிந்து காவல் துறை விசாரணைக்கு உத்திரவிட்டது. இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.
சார்-பதிவாளரின் பொறுப்பற்ற செயலினை கண்டித்து, சார்-பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் மீது  நானும் நீதிமன்றத்தில் எனக்கு நீதி உடனே கிடைக்கும் என்று நம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சார்-பதிவாளரின் தவறான அணுகுமுறையினை எடுத்துரைத்தேன். ஆனால் மெத்தப்படித்த நீதி அரசரோ, என்ன உத்திரவு வழங்கினார் தெரியுமா மக்களே ! சார்-பதிவாளர், தன் கடமையைத்தான் செய்தார், பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ளதைத்தான் செய்துள்ளார். ஒரு அசையா சொத்தினை விற்பனை செய்கையில் அதன் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை. ஆகவே, சார்-பதிவாளரை குற்றம் சொல்ல முடியாது. வாதி, நியாயம் கோரினால், கீழமை நீதி மன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி தீர்ப்பளித்தார். எனக்கு ஒரு சந்தேகம், நீதி மன்றங்களில் வழக்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, அதற்காக. வழக்கு எண்ணிக்கையினை அதிகரிக்கும் நீதிபதிக்கு ஊக்கத்தொகை என்று அரசு அறிவித்திருக்கின்றதோ என்ற் சந்தேகம். இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல். 
இத்தனைக்கும், சார்-பதிவாளர் அலுவலகம், எங்கள் வீட்டிற்கு எதிரில் கல் எறியும் தூரத்தில் உள்ளது. சர்ர்-பதிவாளர் அலுவலகமும், எங்கள் இல்லமும் அமைந்துள்ள சாலை எங்களின் முப்பாட்டனாரின் பெயரில் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள இடம், எங்களின் முன்னோர்களால் இனாமாக வழங்கப்பட்ட இடம். உயர் நீதி மன்றம் சொன்ன பிறகு என்ன செய்வது ? விதியை நொந்துகொண்டு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான்கு ஆண்டுகளாகின்றது. என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் மிக உறுதியாக இருந்த போதிலும், இன்னும் வழக்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இத்தனைக்கும், வழக்கில் சேர்க்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளில் ஒருவரும் வழக்கிற்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கிற்கான செலவு தனி.
நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு நில்லாமல், இணையத்தில் பதிவுத்துறை சட்டத்தினை தரவிறக்கம் செய்து, ஒரு வரி விடாமல் படித்தேன். பதிவுத்துறை சட்டம் 1908 –ம் ஆண்டு ஆங்க்கிலேயர் காலத்தில் அப்பொழுதிருந்த சமூக நிலைக்கேற்ப இயற்றப்பட்டது. காலத்திற்கேற்ப அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். அரசு அவ்வப்போது உப்பு சப்பில்லாத மாற்றங்கள் கொண்டு வந்தாலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவினை தடுக்கும் வழிமுறைகளை ஏனோ இதுவரை கருத்தில் கொள்ளவில்லை. .
பதிவுத்துறை சட்டம் 1908 –ன் படி ஒரு பதிவினை பதிவு செய்கையில், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்படவில்லை. அதாவது, அவர்களின் குடும்ப அட்டையை வைத்தா, வாக்காளர் அடையாள அட்டையை வைத்தா, கடவுச்சீட்டின் (PASS PORT) மூலமாகவா, வங்கி கணக்கு புத்தகத்தின் மூலமாகவா என்று கூறப்படவில்லை. சொத்தின் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை என்று கூறும் பதிவுத்துறை அதிகாரிகள், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணும் முறையினை மட்டும் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படாத நிலையில் எவ்வாறு கையாளலாம் ?
மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்படும் நிலையில் அதனை விசாரித்து, காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ள நிலையில், நானும், எனது குடும்பத்தினரும் அளித்த பல்வேறு புகார் கடிதத்திற்கு, பதிவுத்துறை சட்ட விதி முறைகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துவிட்டு, ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருந்தார்க:ள். இதற்கிடையே, பதிவுத்துறை தலைவருக்கு, பதிவுத்துறை சட்டத்தில் கூறியிருக்கும் விதிகளை சுட்டிக்காட்டி, என் புகாரின் மீது என்ன நடவடிக்கை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட பிறகு, 2011 –ம் வருடம்  பதிவுத்துறை தலைவர் 03-11-2011 நாளிட்ட சுற்றறிக்கை எண் 67 –ஐ வெளியிட்டு, மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்பட்டால் அதனை விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று ஆணையிடுகின்றார். நமது மோசடிப்பேர்வழிகள்  சும்மா இருப்பார்களா ? நீதி மன்றங்கள் எதற்கு இருக்கின்றது ? உடனடியாக, பதிவினை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது, பதிவுத்துறை சட்டத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ள இதில் என்ன உள்ளது ? ஒரு சட்டம் இயற்றப்படுவது பொது மக்களின் நலன் கருதியே. அதை கருத்தில் கொள்ளாமல் 1908 –ம் வருடம் கூறப்பட்டுள்ளதையே பின்பற்றப் படவேண்டுமென்று கூறுவது முற்றிலும் மடமையாகும்.
சரி, பதிவுத்துறை சுற்றறிக்கியினை மேற்கோள் காட்டி பதிவுத்துறையில் புகார் அளித்தால் என்ன கூறுகின்றார்கள் தெரியுமா ? வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுகின்றார்கள். அப்பாவி மக்களும் தங்களின் விதியை நொந்து கொண்டு திரும்பி செல்கின்றார்கள். மக்களே ! புகாரை ஏற்க மறுக்கும் பதிவுத்துறையினை கேளுங்கள் 1) இந்த புகாரின் மீது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதா ? 2) நீதி மன்றம் உத்திரவு அளிக்கும் வரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாகாது என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேளுங்கள்.
இன்றைய வழக்கில் அதாவது வில்லங்க சான்று வழங்குகையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்று கூறி வழங்கியதால் வாங்குபவர் தெரியாமல் வாங்கிவிட்டதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமென்றும் கோருகின்றார். உண்மையாகவும் இருக்கலாம்., ஆனால் பாதிப்பு யாருக்கு ? யாரால் ? பதிவுத்துறையின் பொறுப்பற்ற தனத்தினால் தானே ? இதற்கு பதிவுத்துறை தலைவரின் பதில் என்ன தெரியுமா ? தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது, தற்போதைய புல எண்ணும், பழைய புல எண்ணும் மாறுபடுவதாலும், எல்லைகள் மாறுபடுவதாலும் வில்லங்கங்கள் சரிவர தெரிவிக்க முடிவதில்லை என்பதே. இன்றைய கணிணி உலகில் இத்தகைய பதில் ஏற்புடையதல்ல என்று நீதியரசர் கூறியிருப்பினும், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
எங்களுடைய  இல்லத்தின் மீது ஐந்து வில்லங்கங்கள்  உள்ளது என்கின்ற நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், மேற்கொண்டு புதியதாக வில்லங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ள, பழைய காலத்துடன், புதிய காலத்தையும் சேர்த்து இணைய தளம் மூலமாக வில்லங்க  சான்றிதழ் கோரினேன்.  நேரில் சென்று பெறுகையில், ஒரு வில்லங்கமும் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதனை கண்டு, இதற்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழை காண்பித்து கேட்கையில் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா மக்களே ! சார், அது வந்து, கம்ப்யூட்டரில் தகவல்கள் பதிவேற்றப்படவில்லை, நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பித்ததால் அது போல் சான்றிதழ் வந்துள்ளது, இந்தாருங்கள் என்று பழைய நிலை சான்றிதழை பைசா வாங்காமல் வழங்கினர். ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கின்றது. இது தான் பதிவுத்துறை லட்சணம். இப்பொழுது சொல்லுங்கள், பத்திரப்பதிவுத்துறையா அல்லது பத்திர ஊழல் துறையா  !

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இதை யார் கேட்பது.....?

சமீபத்தில் முகநூலில் படித்தது.இதை யார் கேட்பது.....? அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன். அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்… அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள். தகவல்: தமிழ்வளம்.காம் முடிந்த வரை SHARE செய்யுங்கள்..... அரசு இதை கவனிக்கட்டும்...