செவ்வாய், 4 மார்ச், 2014

பத்திர (பதிவு) ஊழல் துறை


பத்திர (பதிவு) ஊழல் துறை
போலி ஆவணங்களை ஒழிக்க வில்லங்க சான்றிதழ் வழங்குகையில் புதிய நடைமுறையினை பின்பற்ற வேண்டுமென்று பத்திரப்பதிவு துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை கூறியுள்ளதாக இன்றைய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடைபெறுகின்றன. அவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவில் அடங்காது. ஆனால் பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே அதை விட கொடுமை எதுவும் இருக்காது. இதர ஊழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி பாதிப்பு இருக்காது. ஆனால் போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய பாதிப்பு என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். பதிவுத்துறை, வருவாய் துறை, காவல்துறை, நீதிமன்றம் என்று பல்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படுவதோடு, பண விரயம், நேர விரயம், மன உளைச்சல்.... இதெல்லாம் யாருக்கு ? அப்பாவி உரிமையாளருக்கு. எவனோ ஒரு மோசடிப்பேர்வழி, போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சி செய்வான். சொத்திற்கு உரியவர் படாத பாடு பட்டு அதை மீட்பதற்கு பிரம்ம பிரயத்தன்ம் செய்ய வேண்டும். இறுதியில் சொத்து அவருடையது என்று தீர்ப்பு வருகையில் ஒன்று அவர் உயிருடன் இருக்க மாட்டார் அல்லது சொத்தில் பாதிக்கு மேல் வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற செலவு இதயாதி, இத்யாதி என்று அவர் இழந்திருப்பார். மோசடி புரிந்தவன், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மிகச்சுலபமாக தப்பித்துவிடுவான்.
எங்களுடைய பரம்பரை இல்லத்தினை, ஏழு தலைமுறைகளாக இன்றளவும் நாங்கள் வசித்து வரும் இல்லத்தினை ஒரு மோசடிக்கும்பல் எங்களுக்குத் தெரியாமலேயே, ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வில்லங்கங்கள் ஏற்படுத்தி, அதாவது ஓரிரு வருடத்திற்குள்ளேயே பல்வேறு விற்கிரய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இறுதியில், விற்கிரய பதிவு ஒன்றினை பதிவு செய்து, அப்பதிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்கள் நாங்கள் வசித்து வரும் வீட்டினை விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதில் வசித்து வரும் வாடகைதாரர்களாகிய நாங்கள் (இது எப்படி இருக்கு ?) காலி செய்ய மறுப்பதாகவும் கூறி, எங்களை காலி செய்யும்படி உத்திரவு வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் வரை சென்றார்கள். மிகத்தாமதாக, ஆனால் சரியான நேரத்தில் விவரம் அறிந்த நான், பதிவுத்துறை தலைவரை நேரில் சந்தித்து விவரம் தெரிவித்தேன். என் கதையை கேட்ட அவர், ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொன்னதும் வந்ததே எனக்கு கோபம். நேரடியாக அவரிடம் கேட்டே விட்டேன். ஐயா, ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொல்வதற்கா அரசு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியினை நியமிக்கின்றது ? இதுபோல் நடக்கிறதென்றால் அதை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு பதிவுத்துறையில் சட்ட சீர்திருத்தம் கொண்டு வர அரசுக்கு ஆலோசனை கூற வேண்டியது உங்கள் கடமையில்லையா என்று கேட்டவுடன், அவரும் பதிலுக்கு, சொத்து உன்னுடையது தானே, பின் நீ ஏன் காவல் துறையில் புகார் செய்யவில்லை என்று திருப்பி கேட்டார், அதற்கு நான், ஐயா, காவல் துறையில் நான் புகார் அளிக்காமல் இல்லை. ஆனால் காவல் துறை இது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை நீதி மன்றம் தான் விசாரிக்க முடியும் என்று சொல்லி, என் புகாரை ஏற்க மறுக்கின்றார்கள் என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய நிலையும் அதுதான், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கே இல்லை, நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க வேண்டியது தான் என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டார்.
பதிவுத்துறையால் மோசடிப்பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்பதனை அறிந்து, உயர் நீதி மன்றத்தில் காவல் துறையின் மெத்தனத்தை எடுத்துரைத்து வழக்கு பதிவு செய்ய் அறிவுறுத்தி ஆணை வழங்குமாறு கோரி ஒரு வழக்கு தொடுத்தேன். என் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதி மன்றம், அதனின் உண்மையினை அறிந்து காவல் துறை விசாரணைக்கு உத்திரவிட்டது. இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.
சார்-பதிவாளரின் பொறுப்பற்ற செயலினை கண்டித்து, சார்-பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் மீது  நானும் நீதிமன்றத்தில் எனக்கு நீதி உடனே கிடைக்கும் என்று நம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சார்-பதிவாளரின் தவறான அணுகுமுறையினை எடுத்துரைத்தேன். ஆனால் மெத்தப்படித்த நீதி அரசரோ, என்ன உத்திரவு வழங்கினார் தெரியுமா மக்களே ! சார்-பதிவாளர், தன் கடமையைத்தான் செய்தார், பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ளதைத்தான் செய்துள்ளார். ஒரு அசையா சொத்தினை விற்பனை செய்கையில் அதன் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை. ஆகவே, சார்-பதிவாளரை குற்றம் சொல்ல முடியாது. வாதி, நியாயம் கோரினால், கீழமை நீதி மன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி தீர்ப்பளித்தார். எனக்கு ஒரு சந்தேகம், நீதி மன்றங்களில் வழக்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, அதற்காக. வழக்கு எண்ணிக்கையினை அதிகரிக்கும் நீதிபதிக்கு ஊக்கத்தொகை என்று அரசு அறிவித்திருக்கின்றதோ என்ற் சந்தேகம். இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல். 
இத்தனைக்கும், சார்-பதிவாளர் அலுவலகம், எங்கள் வீட்டிற்கு எதிரில் கல் எறியும் தூரத்தில் உள்ளது. சர்ர்-பதிவாளர் அலுவலகமும், எங்கள் இல்லமும் அமைந்துள்ள சாலை எங்களின் முப்பாட்டனாரின் பெயரில் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள இடம், எங்களின் முன்னோர்களால் இனாமாக வழங்கப்பட்ட இடம். உயர் நீதி மன்றம் சொன்ன பிறகு என்ன செய்வது ? விதியை நொந்துகொண்டு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான்கு ஆண்டுகளாகின்றது. என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் மிக உறுதியாக இருந்த போதிலும், இன்னும் வழக்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இத்தனைக்கும், வழக்கில் சேர்க்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளில் ஒருவரும் வழக்கிற்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கிற்கான செலவு தனி.
நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு நில்லாமல், இணையத்தில் பதிவுத்துறை சட்டத்தினை தரவிறக்கம் செய்து, ஒரு வரி விடாமல் படித்தேன். பதிவுத்துறை சட்டம் 1908 –ம் ஆண்டு ஆங்க்கிலேயர் காலத்தில் அப்பொழுதிருந்த சமூக நிலைக்கேற்ப இயற்றப்பட்டது. காலத்திற்கேற்ப அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். அரசு அவ்வப்போது உப்பு சப்பில்லாத மாற்றங்கள் கொண்டு வந்தாலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவினை தடுக்கும் வழிமுறைகளை ஏனோ இதுவரை கருத்தில் கொள்ளவில்லை. .
பதிவுத்துறை சட்டம் 1908 –ன் படி ஒரு பதிவினை பதிவு செய்கையில், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்படவில்லை. அதாவது, அவர்களின் குடும்ப அட்டையை வைத்தா, வாக்காளர் அடையாள அட்டையை வைத்தா, கடவுச்சீட்டின் (PASS PORT) மூலமாகவா, வங்கி கணக்கு புத்தகத்தின் மூலமாகவா என்று கூறப்படவில்லை. சொத்தின் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை என்று கூறும் பதிவுத்துறை அதிகாரிகள், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணும் முறையினை மட்டும் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படாத நிலையில் எவ்வாறு கையாளலாம் ?
மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்படும் நிலையில் அதனை விசாரித்து, காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ள நிலையில், நானும், எனது குடும்பத்தினரும் அளித்த பல்வேறு புகார் கடிதத்திற்கு, பதிவுத்துறை சட்ட விதி முறைகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துவிட்டு, ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருந்தார்க:ள். இதற்கிடையே, பதிவுத்துறை தலைவருக்கு, பதிவுத்துறை சட்டத்தில் கூறியிருக்கும் விதிகளை சுட்டிக்காட்டி, என் புகாரின் மீது என்ன நடவடிக்கை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட பிறகு, 2011 –ம் வருடம்  பதிவுத்துறை தலைவர் 03-11-2011 நாளிட்ட சுற்றறிக்கை எண் 67 –ஐ வெளியிட்டு, மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்பட்டால் அதனை விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று ஆணையிடுகின்றார். நமது மோசடிப்பேர்வழிகள்  சும்மா இருப்பார்களா ? நீதி மன்றங்கள் எதற்கு இருக்கின்றது ? உடனடியாக, பதிவினை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது, பதிவுத்துறை சட்டத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ள இதில் என்ன உள்ளது ? ஒரு சட்டம் இயற்றப்படுவது பொது மக்களின் நலன் கருதியே. அதை கருத்தில் கொள்ளாமல் 1908 –ம் வருடம் கூறப்பட்டுள்ளதையே பின்பற்றப் படவேண்டுமென்று கூறுவது முற்றிலும் மடமையாகும்.
சரி, பதிவுத்துறை சுற்றறிக்கியினை மேற்கோள் காட்டி பதிவுத்துறையில் புகார் அளித்தால் என்ன கூறுகின்றார்கள் தெரியுமா ? வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுகின்றார்கள். அப்பாவி மக்களும் தங்களின் விதியை நொந்து கொண்டு திரும்பி செல்கின்றார்கள். மக்களே ! புகாரை ஏற்க மறுக்கும் பதிவுத்துறையினை கேளுங்கள் 1) இந்த புகாரின் மீது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதா ? 2) நீதி மன்றம் உத்திரவு அளிக்கும் வரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாகாது என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேளுங்கள்.
இன்றைய வழக்கில் அதாவது வில்லங்க சான்று வழங்குகையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்று கூறி வழங்கியதால் வாங்குபவர் தெரியாமல் வாங்கிவிட்டதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமென்றும் கோருகின்றார். உண்மையாகவும் இருக்கலாம்., ஆனால் பாதிப்பு யாருக்கு ? யாரால் ? பதிவுத்துறையின் பொறுப்பற்ற தனத்தினால் தானே ? இதற்கு பதிவுத்துறை தலைவரின் பதில் என்ன தெரியுமா ? தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது, தற்போதைய புல எண்ணும், பழைய புல எண்ணும் மாறுபடுவதாலும், எல்லைகள் மாறுபடுவதாலும் வில்லங்கங்கள் சரிவர தெரிவிக்க முடிவதில்லை என்பதே. இன்றைய கணிணி உலகில் இத்தகைய பதில் ஏற்புடையதல்ல என்று நீதியரசர் கூறியிருப்பினும், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
எங்களுடைய  இல்லத்தின் மீது ஐந்து வில்லங்கங்கள்  உள்ளது என்கின்ற நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், மேற்கொண்டு புதியதாக வில்லங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ள, பழைய காலத்துடன், புதிய காலத்தையும் சேர்த்து இணைய தளம் மூலமாக வில்லங்க  சான்றிதழ் கோரினேன்.  நேரில் சென்று பெறுகையில், ஒரு வில்லங்கமும் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதனை கண்டு, இதற்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழை காண்பித்து கேட்கையில் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா மக்களே ! சார், அது வந்து, கம்ப்யூட்டரில் தகவல்கள் பதிவேற்றப்படவில்லை, நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பித்ததால் அது போல் சான்றிதழ் வந்துள்ளது, இந்தாருங்கள் என்று பழைய நிலை சான்றிதழை பைசா வாங்காமல் வழங்கினர். ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கின்றது. இது தான் பதிவுத்துறை லட்சணம். இப்பொழுது சொல்லுங்கள், பத்திரப்பதிவுத்துறையா அல்லது பத்திர ஊழல் துறையா  !